அபு அலா
இன்று எமது நாடு நாலா பக்கமும் நெடுஞ்சாலைகள் அமையப்பெற்று ஒரு அழகுத் தோற்றத்துடன் காட்சி தருவது அனைவருக்கும் சந்தோஷமான விடயமாக இருந்தாலும், கிழக்கில் இன்னும் பாதைகள் சரியான முறையில் அமைக்கப்படவில்லை என்றுதான் சொல்ல சொல்லலாம். அதனை சரியான முறையில் அமைக்கவேண்டிய தேவை எமக்கிருக்கிறது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான சுற்றுலா மையம் மட்டக்களப்பு நீருற்றுப் பூங்கா வளாகத்தில் திறந்து வைத்த பின்னர் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு மாவட்ட மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
கிழக்கில் முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையினரின் வருகை அதிகரிக்கின்றபோது ஏராளமான தொழிற்துறைகளை உருவாக்கும் தேவையும் அதன் மூலம் எமது மக்கள் நன்மையடையும் தொகையையும் அதிகரித்துக்கொள்ள முடியும். அதனை முன்னெடுக்க இன்றைய முக்கிய தேவைகளில் ஒன்றாக இருப்பது வீதிகளாகும். இவ்வீதிகளின் தேவைப்பாடுகள் ஒரு முக்கிய காரணியாக இன்று உணரப்படுகிறது.
கிழக்கின் அபிவிருத்தியில் வீதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்பதனால், இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் நெடுஞ்சாலைகள் அமைப்பில் கொழும்பிலிருந்து பொலன்னறுவை வரையிலான வீதியினை முதலில் அமைக்கப்படவேண்டும் என்று நான் ஜனாதிபதியினுடனான சந்திப்பின்போது இதனை குறிப்பிட்டுக்காட்டவுள்ளேன்.
பொலனறுவை வரையிலான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டால் கொழும்பில் இருந்து இரண்டு மணிநேரத்திற்குள் பொலனறுவை சென்றடையலாம். இதனால் கிழக்கின் பல பாகத்துக்கும் பயணிக்கும் மக்களின் போக்குவரத்துக்கு பெரும் ஆறுதலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே எதிர்வரும் நான்கு வருடத்துக்குள் பாரிய சேவைகள் கிழக்கில் இடம்பெறவிருக்கிறது. அதற்கான எனது பணிகள் மிக சிறப்பாக இடம்பெறும் இன்றும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அத்துடன் மட்டக்களப்பில் இருந்து பொத்துவிலுக்கும், பொத்துவிலிருந்து அம்பாறைக்கும் புகையிரத சேவையினை வழங்க சகல நடவடிக்கைகளும் ஏற்பாடாகியுள்ளது இதற்கான வேலைகள் மிக விரைவில் நடைபெறும் என்றும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.