ஐரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டத்தில் மன்னார் மாவட்டம் புறக்கணிப்பு -வடமாகாண சபை உறுப்பினர் எச். எம். றயீஸ்
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட இருக்கும் நிரந்தர வீட்டுத்திட்டத்தில், மன்னார் மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களும் உள்வாங்கி இருப்பதாக அறிய முடிகின்றது.
கடந்த காலங்களில் யுத்தத்தினால் வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதை காணக்கூடியதாக உள்ளது. மன்னார் மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களும் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படாமல் பெரும்பாலான வீடுகள் அரசியல் கட்சி சார்ந்தவர்களுக்கும் மாவட்டத்தில் செல்வாக்கு செலுத்துகின்ற அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்களுக்குமே வழங்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட இருக்கும் வீட்டுத்திட்டத்தில் மன்னார் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டிருப்பது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருப்பதாக மாகாண சபை உறுப்பினர் தெரிவிக்கின்றார்.
எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டத்தில் மன்னார் மாவட்டத்தையும் உள்வாங்கி உண்மையாக பாதிக்கப்பட்டவர்களை இனங்கண்டு அவர்களுக்கு வீடுகள் கிடைக்கச் செய்ய உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வடமாகாண சபை உறுப்பினர் றயிஸ் வடமாகாண ஆளுநர், வடமாகாண முதலமைச்சர், மீள்குடியேற்ற அமைச்சர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக மாகாண சபை உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஏ.சீ. முஸாதிக் அவர்கள் தெரிவித்துள்ளார்.