அசாஹிம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கடந்த 15.08.2015ம் திகதி கொலை செய்யப்பட்ட ஜமால்தீன் அமீன் என்பவரது கொலையுடன் சம்மந்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட பிரதான சந்தேக நபரும் அவருக்கு கைத்துப்பாக்கியை விற்பனை செய்தவரும் வாழைச்சேனை பொலிஸாரினால் நேற்று (வியாழக்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிராதன சந்தேக நபரான மீறாவோடை பாடசாலை குறுக்கு வீதியில் வசித்து வந்த அப்துல் மஜீட்; முஹம்மது பஷீல் (வயது – 43) என்பவரும் அவருக்கு கைத்துப்பாக்கியை விற்பனை செய்த கல்முனை பி.பி.வீதியைச் சேர்ந்த ஆதம்பாவா முஹம்மது கடாபி (வயது – 38) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும்; கைப்பற்றப்பட்டுள்ளன.
வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுனயின் வழிகாட்டலில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி.ஏ.அர்ஜூன ரத்ணாயக்க தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்கலான எம்.எஸ்.ஏ.ஜூனைட் மற்றும் எம்.பி.எம்.தாஹா ஆகியோர் மேற்கொண்ட விசாரனைகளின் பிரகாரம் முதலாவது சந்தேக நபர் புத்தளம் கற்பிட்டி என்ற இடத்தில் வைத்தும் கைத்துப்பாக்கியை விற்பனை செய்தவர் கல்முனையில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக் கொலைச் சம்பவம் அரசியல் நோக்கத்திற்காக இடம் பெற்றதாக கூறப்பட்ட போதிலும் இக் கொலை குடும்பத்தகராறு காரணமாகவே இடம் பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரனைகளின் மூலம் தெரியவருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.