இரட்டை குடியுரிமையால் UPFA பதினொரு பாராளுமன்ற ஆசனங்களை இழக்கக்கூடிய அபாயம் !

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பதினொரு பாராளுமன்ற ஆசனங்களை இழக்கக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றது. மாத்தறை மற்றும் காலி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள் தகுதியிழக்கக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.இலங்கையின் புதிய சட்டங்களின் அடிப்படையில் வெளிநாட்டுப் பிரஜைகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

UPFA-25
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமயிலான அரசாங்கம், 19ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியிருந்தது.இந்த திருத்தச் சட்டத்தில் வெளிநாட்டுப் பிரஜையொருவர் இலங்கையில் தேர்தலில் போட்டியிட்டு பதவி வகிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் நிலையில் காலி மற்றும் மாத்தறை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சர்hபில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் வெளிநாட்டுப் பிரஜைகள் என கண்டறியப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய கீதா குமாரசிங்க சுவிட்சர்லாந்து நாட்டின் பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது.
தாம் சுவிட்சர்லாந்து நாட்டின் பிரஜை என்பதனை ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.இலங்கைப் பிரஜைகள் வேறும் நாட்டின் பிரஜையாக இருந்தால் தேர்தலில் போட்டியிட்டு பதவி வகிக்க முடியாது என 19ம் திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட மனோஜ் பிரசங்க ஹேவாகம்பலகே ஓர் அவுஸ்திரேலிய பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது.
மனோஜை வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொண்டமை தொடர்பில் ஜே.வி.பி கேள்வி எழுப்பியுள்ளதுடன், சட்ட நடவடிக்கை முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 1981 பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகவும், 19ம் திருத்தச் சட்டம் இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை என மாத்தறை தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.
எனினும், தேவை என்றால் உச்ச நீதிமன்றின் ஊடாக வழக்குத் தொடர்ந்து இரட்டைக்குடியுரிமை உடையவர்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பட்டியலில் இணைத்துக் கொண்டமைக்கு எதிராக சவால் விடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்களின் தகுதி குறித்து உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையளாளரும் நிர்ணயிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.தகுதியற்றவர்கள் என தீர்மானிக்கப்பட்டால் ஒட்டுமொத்த பட்டியலும் நிராகரிக்கப்பட்டு இரண்டு மாவட்டங்களிலும் 11 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இழக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இவ்வாறான ஓர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலளார் துமிந்த திஸாநாயக்க ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்தோலாசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.