சர்வதேச சமுதாயம் ஏற்கக்கூடிய நம்பகரமான உள்நாட்டு விசாரணையை முன்னெடுப்பதன் மூலம் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆபத்தை அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தேய நாடுகளின் ஆசிர்வாதத்துடன் விளக்கிக்கொள்ள முடியும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க நேற்று கூறினார்.
மைத்திரிபால அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இலங்கை தொடர்பில் முன்னர் காணப்பட்ட பகைமையான மனப்பாங்கு, புரிந்துணர்வும் மதிப்பும் மிக்கதாக மாறியுள்ளதெனவும் அவர் கூறினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற ஊடவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘ஐ.நா மனித உரிமை பேரவையின் அறிக்கை, இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, செப்டெம்பர் வரை தாமதிக்கின்றமையானது இலங்கைக்கு, மேற்கு நாடுகள் காட்டியுள்ள நல்ல சமிக்ஞைகள் ஆகும்’ என்றார்.
‘அமெரிக்கா, ஏற்கெனவே இலங்கையின் விசாரணைக்கு ஆதரவை தெரிவித்துள்ளது. இலங்கை கேட்டுக்கொண்டபடி நல்லிணக்க செயன்முறையை முடிக்கும்வரை விசாரணைகளை நிறுத்திவைக்கும் படி, இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளதை, உலக சமுதாயம் ஏற்றுக்கொண்டுள்ளது. மேற்கத்தேய நாடுகள் 2009இல் இலங்கைக்கு ஒரு நம்பகத்தன்மையான உள்நாட்டு விசாரணையை நடத்துவதற்கு வாய்ப்பு கொடுத்தன.
அத்துடன், இலங்கைக்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தையும் அவை நிறைவேற்றின. ஆனால், துரதிஷ்டவசமாக அப்போதைய அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த தவறவிட்டதுடன், சர்வதேச சமூதாயத்தையும் பகைத்துக்கொண்டது. இத்தோடு உலக சமுதாயம் இலங்கையுடன் தொடர்ந்து கடும் போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இது ஐ.நா. விசாரணைகளையும் மிகவும் பகைமையான அறிக்கைக்கு வழிவகுத்தது’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ‘இப்போது, எமக்கு கிடைத்துள்ள அறிய வாய்பை நாம் அலட்சியம் செய்யமுடியாது.
இதை நாம் உச்ச அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம் நட்பு ரீதியான சர்வதேச சமூதாயத்தின் ஆதரவுடன் நாம் இந்த பிரச்சினையில் இருந்து விடுப்பட்டுக்கொள்ளமுடியும்’ என்றும் மஹிந்த சமரசிங்க கூறினார்