அஸ்லம் எஸ்.மௌலானா
“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தேர்தல் கூட்டணி ஒன்றில் இணைந்தமையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் அரசியல் எழுச்சியினையும் வெற்றியினையும் கண்டிருக்கிறது. எமது முன்னணி செய்த பாரிய உழைப்பு மற்றும் தியாகங்கள் மூலமாகவே இந்த வெற்றி சாத்தியமானது. இந்தக் கூட்டணியை மேலும் வலுப்படுத்தி முன்கொண்டு சென்று இன்னும் பல வெற்றிகளை காண்பதென்பது இப்போது மு.கா.வின் கைகளியேயே தங்கியுள்ளது” என அம்முன்னணியின் தவிசாளர்- பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நடை பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அப்துர் ரஹ்மான் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது;
“தனது ஸ்தாபகத் தளமான மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.கா. பாரிய பின்னடைவுகளை கடந்த காலங்களில் கண்டிருக்கிறது. கட்சியால் வளர்க்கப்பட்டவர்கள் அந்தக்கட்சிக்குத் செய்த துரோகத்தனங்களும், அவ்வாறானவர்கள் தொடர்பில் கட்சி நடந்து கொண்ட விதமும் இதற்குப் பிரதான காரணங்களாக இருந்தன.
இந்த வீழ்ச்சியினை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சில சக்திகள் தம்மை வளர்த்துக் கொண்டார்கள். இந்த இடைவெளியை நிரப்பும் வகையிலேயே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கடந்த கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
முஸ்லிம் கட்சிகள் ஒரு சுய விமர்சனத்திற்கு ஊடாக தமது தவறுகளை இனம் கண்டு அவற்றுக்கான பரிகாரங்களை மேற்கொண்டு சமூகத்திற்கும் நாட்டிற்கும் பணியாற்றும் வகையில் முன்னகர வேண்டும் என்பதே எப்போதும் எல்லோரினதும் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலேயே நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. அந்தப் பின்னணியிலேயே கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மு.கா.வுடன் ஒரு தேர்தல் கூட்டணியை நாம் ஏற்படுத்திக் கொண்டோம்.
நல்லாட்சிக்காக கூட்டிணைந்து உழைத்தல், பிரதேச மற்றும் இன உறவுகளை வலுப்படுத்துதல் முஸ்லிம் சமூகத்தினதும் ஏனைய மக்களினதும் நலன்களைப் பாதுகாத்தல் போன்ற அடிப்படை நோக்கங்களைக் கொண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினையும் நாம் மு.கா.வுடன் கைச்சாத்திட்டோம். இந்தக் கூட்டணியினை முஸ்லிம் மக்கள் பாரிய உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் வரவேற்றார்கள். இந்தக்கூட்டணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைத்த தேர்தல் வெற்றி இதனை உறுதி செய்கிறது.
38477 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ள இந்த அரசியல் கூட்டணி இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அடுத்ததாகப் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட அரசியல் சக்தியாக இடம்பிடித்திருக்கிறது. இதன் விளைவாக இந்தக்கூட்டணி மிகச் சௌகரியமாக ஒரு பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் முழு இலங்கையிலும் முஸ்லிம் காங்கிரஸ் தனது கட்சியின் பெயரில் பெற்றுக் கொண்ட ஒரேயொரு ஆசனமாகவும் இது இருக்கிறது.
காத்தான்குடிப் பிரதேசத்தை பல்லாண்டு காலமாக தனது அரசியல் பிடியில் வைத்திருந்த சமூக விரோத சக்திகளையும் தோற்கடித்து காத்தான்குடி பிரதேசத்தில் பெரும்பான்மை மக்கள் பலத்தை இந்தக்கூட்டணி பெற்றிருக்கிறது. அது போலவே, திருமலை மாவட்டத்திலும் மிகக் கணிசமான மக்கள் ஆதரவினை இந்தக் கூட்டணி சார்பாகப் போட்டியிட்ட எமது வேட்பாளரால் பெற முடிந்திருக்கிறது.
இந்தப் பாரிய வெற்றியை சாத்தியப்படுத்துவதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபையும் அதன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பாரிய தியாகங்களையும் பங்களிப்புக்களையம் செய்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 17 மில்லியன் அளவிலான நிதி எம்மால் இக்கூட்டணியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஒரு சதத்தைக்கூட மு.கா.விடமிருந்து நாம் பெற்றுக் கொள்ள வில்லை. அவ்வாறு பெறுவது எமது வழிமுறையும் அல்ல. முழுக்க முழுக்க இந்தத் தொகையை எமது தலைமைத்துவ சபையும் எமது இயக்க உறுப்பினர்களும் ஆதரவாளர்களுமே வழங்கியிருக்கிறார்கள்.
இந்த வெற்றியில் எமது பெண்கள் அணி செய்த பங்களிப்பு மிக மகத்தானது. ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் பலத்தை ஆட்டம் காணச் செய்யும் வகையில் ஒரு பிரமாண்டமான மகளிர் மாநாட்டை எமது மகளின் அணியினர் நடாத்தியிருந்தனர். 5000 க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்ட இம்மாநாடு முழு இலங்கையிலும் தேர்தல் காலத்தில் நடாத்தப்பட்ட ஒரேயொரு பிரமாண்டமான மகளிர் மகாநாடாக அமைந்தது.
அது மட்டுமின்றி எமது பிரச்சாரத்திற்காக நமது மகளிர் அணியினர் வீடுவீடாகச் சென்று பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதற்கு மேலதிகமாக எமக்கு நிதித்தட்டுபாடு ஏற்பட்ட ஒரு சிக்கலான தருணத்தில் தமது தங்க நகைகளைக்கூட அன்பளிப்பாக வழங்கினர். இப்படியான தியாகங்களும் உழைப்பும்தான் இந்தக்கூட்டணியின் பாரிய வெற்றியைச் சாத்தியமாக்கியது.
ஒரு சில ஆயிரம் வாக்குகளைப் பெற இக்கூட்டணி தவறியிருக்குமேயானால் மு.கா. இம்மாவட்டத்தில் ஆசனத்தை இழந்திருக்கும் என்பது மட்டுமின்றி வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட சமூக விரோத சக்திகள் வெற்றியடைவதற்கும் அது காரணமாக அமைந்திருக்கும். இப்பாரிய வெற்றியைக் கண்டுள்ள இக்கூட்டணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை எல்லோரும் விரும்புகின்றார்கள்.
எங்களைப் பொறுத்த வரையில் இக்கூட்டணிக்கான பங்களிப்புக்களையும் கடமைகளையும் மிகவும் பொறுப்படனும் தியாகத்துடனும் செய்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது பொறுப்பை நூறு வீதம் நிறை வேற்றியுள்ளது. அத்தோடு இக்கூட்டணியை வலுப்படுத்தி மேலும் கொண்டு செல்ல வேண்டும் என்பதிலும் ஆர்வமாக உள்ளோம். இப்போது இந்த விடயம் SLMCயின் தலைமைத்துவத்தின் முடிவிலும் நடவடிக்கைகளின் முடிவிலுமே தங்கியுள்ளது.
எந்தவொரு அரசியல் கூட்டணியினதும் தொடர் பயணம் என்பது பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான பரஸ்பர மரியாதையிலும் தமது கடமைகளை பரஸ்பரம் உரியமுறையில நிறைவேற்றுவதிலுமே தங்கியிருக்கிறது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இவ்வாறான பாரிய பங்களிப்பின் மூலமாகவே இறைவனின் உதவியுடன் மு.கா.வினால் ஒரு பாராளுமன்றப் பிரதிநிதியைப் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கின்றது.
மு.கா.வின் வெற்றிக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செய்துள்ள பங்களிப்பையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் மு.கா. செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்பாட்டினையும் மதித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குரிய பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துவது மு.கா.வின் கடமையாகும். எனவே, இக்கூட்டணியை முன் கொண்டு சொல்லும் வகையில் தமது பொறுப்பினை மு.கா. நிறைவேற்றும் என நாம் எதிர் பார்க்கிறோம்.
இது தொடர்பாக கடந்த 24.08.2015ஆம் திகதி நாம் மு.கா. தலைமைத்துவத்தோடு நாம் கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். தேசியப்பட்டியல் தொடர்பில் மு.கா. தலைமைத்துவத்திற்கிருக்கும் நெருக்கடி நிலைமைகளையும் நாம் புரிந்து கொள்கிறோம். இருந்தாலும் இக்கூட்டணியின் எதிர்காலம் தொடர்பில் காலம் தாழ்த்தாது அவசரமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் மு.கா. தலைமைத்துவத்திற்கு நாம் எடுத்துரைத்துள்ளோம்.
அந்த வகையில் இந்த வார இறுதிக்குள் எமது தலைமைத்துவ சபையும் மு.கா. உயர்மட்டத்தினரும் உத்தியோகபூர்வமான சந்திப்பொன்றை மேற்கொண்டு உரிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முடிவு செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.