தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமரச் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் தேசிய அரசாங்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் எமது செயற்பாடுகள் மீது நம்பிக்கை வைத்து எமக்கு வாக்களித்த 47 இலட்சம் மக்களின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில் நாம் ஒரு போதும் செயற்படப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
சொத்து விபரம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்வதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு வரவழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது தனது வாக்கு மூலத்தினை பதிவு செய்த பின்னர் அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த பொதுத் தேர்தலில் எம்மீது நம்பிக்கை வைத்து எமக்கு வாக்களித்த 47 இலட்சம் மக்களின் நம்பிக்கையை வீணடிக்கும் வகையில் நாம் ஒரு போதும் செயற்பட போவது இல்லை. அந்த வகையில் ஐக்கிய தேசிய கட்சி யா னது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டமைக்கான முக்கிய காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமரவைப்பதற்கே ஆகும்.
இவ்வாறான நிலையில் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக பாராளுமன்றத்தில் செயற்படுவாராயின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவா மாநாட்டில் இலங்கையின் யுத்த காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பில் அறிக்கையொன்று வெளியிடப்படவுள்ள நிலையில் இது குறித்து சம்பந்தனினால் கூறப்படும் கருத்தானது அனைவரினாலும் நம்பப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
இதற்கான சந்தர்ப்பத்தை ஐக்கிய தேசியக்கட்சி சம்பந்தனுக்கு ஏற்படுத்தி கொடுக்கும் வகையிலேயே தேசிய அரசாங்கம் ஒன் றுக்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது.
இந்நிலைமையானது மிகவும் பாரதூரமா னது. அந்த வகையில் நாம் எவ்வாறான சந் தர்ப்பத்திலும் தேசிய அரசுடன் இணையப் போவது இல்லை என்றார்.