பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய 196 உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை அரச அச்சக திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு அதனை பிரசுரிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பொதுத் தேர்தல் பெறுபேறுகள் வெ ளியிடப்பட்டுள்ள நிலையில் ஒரு வாரத்திற்குள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய வெற்றியீட்டிய கட்சிகளின் பொதுச் செயலாளர்கள், தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.
தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் கிடைத்ததும் அதனையும் வர்த்தமானியில் அறிவிப்பதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.
பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகளுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சிக்கு 93 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 83 ஆசனங்களும் கிடைத்தன.
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் இம்முறை 14 பேர் தேர்தல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணி நான்கு ஆசனங்களை கைப்பற்றியது.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தலா ஒரு ஆசனம் கிடைத்தது.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 13 தேசியப் பட்டியல் ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 12 தேசியப் பட்டியல் ஆசனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றுக்கு தலா இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுச் செயலாளர் பதவி குறித்து ஏற்பட்டுள்ள சர்ச்சை நிலைமை தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் எவ்வாறான ஆலோசனை வழங்கியது என்பதனை பகிரங்கப்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் பொதுச் செயலாளராக கடமையாற்றி வந்த சுசில் பிரேம் ஜயந்த பணி நீக்கம் செய்யப்பட்டு அப்பதவிக்கு பேராசிரியர் விஸ்வ வர்ணபால ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து சுசில் பிரேம்ஜயந்தவும், விஸ்வ வர்ணபாலவும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களைப் பெயரிட்டு தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்க முயற்சித்தனர். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
அவ்விடயம் குறித்து தேர்தல்கள் ஆணையாளர் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உதவியை நாடியிருந்தார். இந்நிலையில், அது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்நிலையில், அரச ஊழியர்களுக்கான ஒழுக்க கோவையின் பிரகாரம் தேர்தல்கள் ஆணையாளரான தமக்கு சட்ட மா அதிபரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட விளக்கத்தை பகிரங்கப்படுத்த அதிகாரம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தேசியப் பட்டியல் உறுப்பினர் விபரங்கள் தொடர்பில் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.