புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு, தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி நேற்று வழங்கப்பட்டதையடுத்து, காத்தான்குடியில் நல்லாட்சி அரசாங்கத்திற்காகப் பாடுபட்ட, ஆதரவளித்து வாக்களித்தவர்கள்மீது பாலிய வன்முறைகள் இடம்பெற்றன.
கடந்த 17ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற ஹஸ்புல்லாஹ்வுக்கு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை ஐ.ம.சு. கூட்டணி வழங்கிய செய்தியறிந்த அவரது ஆதரவாளர்கள், காத்தான்குடியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பட்டாசுகளைக் கொளுத்தியவாறு ஆராவாரமாக வீதிகளில் வெறித்தனமாக இறங்கினர்.
இவர்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களிலும் பிரதான வீதி, ஊர்வீதி, கடற்கரை வீதி, ரெலிகொம் வீதி உள்ளிட்ட உள்ளக வீதிகளிலும் ‘ஹோர்ன்’ ஒலி எழுப்பியவாறு பயங்கரமான கூச்சல் சத்தமிட்டு ஊர்வலமாக சென்றனர்.
இதன்போது கடந்த ஜனவரி மாதம் 08ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், இம்மாதம் 17மதிகதி நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்காக முன்னின்று பாடுபட்ட ஆதரவாளர்களின் வீடுகளுக்கு முன்னால் பாரியளவில் பட்டாசுகளைக் கொழுத்தி அச்சமூட்டியதுடன், தகாதவார்த்தைகளால் தூஷித்தும், எச்சரித்தும் சென்றனர்.
இவ்வேளையில் மட்டக்களப்பிலுள்ள கிழக்கு ஊடக சங்கத்தின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பை முடித்துக் கொண்டு காத்தான்குடி ஊர்வீதி வழியாக வந்து கொண்டிருந்த கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் மற்றும் பொதுச் செயலாளர் வி. பத்மசிறி ஆகியோர் மீதும் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் கல்வீச்சுக்களை மேற்கொண்டனர்.
இத்தாக்குதலில் இவர்களால் வீசுப்பட்ட கல் ஒன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த புவி. றஹ்மதுழ்ழாஹ்வைத் தாக்கிய போதிலும் அவர் தனது வாகனத்தை நிறுத்தாமல் செலுத்தியதால் பின்னால் வந்த பொதுச் செயலாளர் பத்மசிறியை வழிமறித்துத் தாக்க முயற்சித்தனர். எனினும் அவரும் சாதுரியமாக ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவுக்கும்பலிடம் அகப்படாமல் தப்பித்துச் சென்றார்.
புpரதான வீதுpயில் கடாபி ஹோட்டல் சதுக்கத்தில் இடம்பெற்ற கலவரத்தில் சம்பந்தப்பட்ட ஹிஸ்புல்லாஹ் ஆதரவு இளைஞர் கும்பல் ஒன்றைக் கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்ட காத்தான்குடி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் மீதும் கண்ணாடி போத்தல்களால் தாக்குதல் நடாத்தப்பட்டது. இத்தாக்குதலில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்ததுடன் வேறு பல தாக்குதல் சம்பவங்களிலும் மேலும் இரண்டு பெண்கள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் அதில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 9 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசலைக்கு மேலதிக சிகிச்சைக்காக இடமாற்றப்பட்டதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளன.
காத்தான்குடி கடற்கரை வீதியில் மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலைக்கு முன்பாகவுள்ள ஹோட்டலொன்றும் ஹிஸ்புல்லாஹ் ஆதரவுக்கும்பலால் தாக்கப்பட்டுள்ளது. கடற்கரை வீதியெங்கும் போத்தல் மற்றும் கண்ணாடிச் சிதறல்கள் காணப்படுவதாக பலரும் தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்த வன்முறைகளின்போது காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியிலுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத்தினரின் பள்ளிவாயலுக்குள் புகுந்த ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் அங்கு ‘மஃரிப்’ தொழுகையில் ஈடுபட்டிருந்தோருக்கு மத்தியில் பள்ளிவாசலினுள் பட்டாசுகளைக் கொளுத்தி வீசியதாகவும், இதனால் கலவரமடைந்த தொழுகையாளிகள் தமது தொழுகையைக் கைவிட்டு தாக்குதல்தாரிகளைத் துரத்திப் பிடித்து பள்ளிவாசலில் கட்டியதாகவும், இத்தாக்குதலில் தேசிய தௌஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும், காத்தான்குடி அப்துர் றவூப் மௌலவியின் ஆதரவாளர்களும் இங்கு அடையாளம் காணப்பட்டதாகவும் ஜமாஅத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நடைபெற்று முடிந்த தேர்தலில் 127 வாக்குகளால் தோற்கடித்திருந்தனர். 25 வருட அரசியல் ஜாம்பவானான அவருக்கு இந்த மிகச் சிறிய வாக்குத் தொகையால் தோல்வியடைந்தது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறு மக்களால் ஜனநாயக வழியில் தோற்கடிக்கப்பட்டவருக்கு இந்நாட்டில் ‘நல்லாட்சியின் தந்தை’ எனப் போற்றப்படுகின்ற மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான ஐ.ம.சு.கூட்டணி மீண்டும் எம்.பி. பதவியை வழங்கியதையடுத்தே இந்த ஆராவாரமான வன்முறைத் தாக்குதல் அவரது ஆதரவாளர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளதாபகக் குற்றஞ்சாட்டும் பிரதேசவாசிகள், இது குறித்து தமது கண்டனங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கரமசிங்க ஆகியோருக்கும் தெரிவித்துள்ளனர்.
இக்கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மேலதிக பொலிசார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் காத்தான்குடிக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்புக்கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.