– அபு அலா –
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்புக் காரணமாக சுமார் எட்டு ஹெக்டேயர் தென்னந்தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதனால், 50 இலட்சத்துக்கும் மேல் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தென்னந்தோட்ட உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஒலுவில் துறைமுகத்திலிருந்து நிந்தவூரின் தெற்குத் திசை நோக்கி சுமார் 10 கிலோமீற்றர் தூரத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடல் நீர் கரையை நோக்கி சுமார் 200 மீற்றர் தூரத்துக்கு வருகின்றது. இந்த நிலையில், தென்னை மரங்கள் கடல் நீரினால் அடித்துச்; செல்லப்படுகின்றன. அத்துடன், இந்தக் கடல் அரிப்புக் காரணமாக மீன்பிடி வள்ளங்கள் நிறுத்துவதற்கான இடம் இல்லாமல் போயுள்ளதுடன், சுமார் 30 மீனவர்களின் வாடிகளும் சேதமடைந்துள்ளன.
இப்பிரதேசத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாக காணப்பட்ட வெளிச்சவீட்டுப் பிரதேசமும் கடல் நீரினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. எனவே, கடல் அரிப்பை பூரணமாகக் கட்டுப்படுத்த வேண்டுமாயின், கடற்கரையோரத்தில் கருங்கற்களைக் கொண்ட வேலி அமைக்கப்பட வேண்டும். மேலும், தங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கையை உரிய அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று கடல் அரிப்பினால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள தென்னந்தோட்ட உரிமையாளர்களும் மீனவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.