நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதிய அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்கும் சாத்தியம் உள்ளதென கட்சித் தகவல்கள் தெரிவித்தன.
ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினமே பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டபோதும் கொழும்பு மாவட்டத்தின் விருப்பு வாக்கு விபரங்கள் நேற்று இரவு வரை வெளியிடப்படாமல் இருந்தமையினால் அவர் நேற்று பிரதமராக பதவியேற்கவில்லை.
இந்நிலையிலேயே இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றால் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையும் இன்றைய தினம் பதவியேற்கலாம் என தெரிய வருகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 106 ஆசனங்களை பெற்று வெற்றிபெற்றது. தேர்தலில் அறுதி பெறும்பான்மை ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கவில்லை என்றாலும் கூடிய ஆசனங்களை பெற்ற கட்சி என்ற ரீதியில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்கவுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமராக நான்காவது தடவையாக பதவியேற்கவுள்ளார். அவர் இதற்கு முன்னர் 1993,2001 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நாட்டின் பிரதமராக பதவியேற்றிருந்தார். அந்தவகையில் இம்முறை நான்காவது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.