எஸ்.அஷ்ரப்கான்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் தொடர்பாக நீதிமன்றம் செல்ல ஆலோசித்து வருவதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடும்போது,
அம்பாரை மாவட்டத்தில் 4 இலட்சத்து 65 ஆயிரத்து 757 மொத்த வாக்குகள் இருக்கின்றன. அதேநேரம் தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து மாவட்ட வாக்களிப்பு வீதங்கள் அறிவிக்கப்பட்டபொழுது அம்பாரை மாவட்டத்தில் சுமார் 65 வீதம் வாக்களிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது வெளிவந்திருக்கின்ற தேர்தல் முடிவுகளின்படி வாக்களிப்பு வீதம் 73.61 ஆக காட்டப்படுகின்றது. அதாவது நிராகரிக்கப்பட்ட வாக்குகள் மற்றும் தபால் மூல வாக்குகள் உட்பட மொத்தமாக 3 இலட்சத்து 42 ஆயிரத்து 838 வாக்குகள் அளிக்கப்பட்டதாக காட்டப்படுகின்றது. மொத்த வாக்குகள் 73.61 என்றால் பல இடங்களில் 85 வீதம் 90 வீதம் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தால்தான் சராசரி 73.61 வீதம் சாத்தியமாகும். அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சி அம்பாரை மாவட்டத்தில் 1 இலட்சத்து 51 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருக்கின்றது. இதில் அம்பாரை தொகுதியில் 49 ஆயிரத்து 751 வாக்குகள் பெறப்பட்டிருக்கின்றன. இவைகள் சிங்கள வாக்குகளாகும். எஞ்சியிருப்பது 1 இலட்சத்து ஓராயிரம் வாக்குகள். இதில் பொத்துவில் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட 15 ஆயிரத்து 575 வாக்குகளுள் 2 ஆயிரம் வாக்குகள் சிங்கள வாக்குகள் என்று கழித்தாலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு அம்பாரை மாவட்டத்தில் 98 ஆயிரம் முஸ்லிம் வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரம் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு 33 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு பொத்துவிலில் இரண்டாயிரம் போக மீதியுள்ள 13500, சம்மாந்துறையின் 6400 மற்றும் கல்முனையின் 700 அடங்கலாக சுமார் 20 ஆயிரத்து 500 முஸ்லிம் வாக்குகள் அம்பாரை மாவட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதனது கூட்டுத் தொகை 1 இலட்சத்து 51 ஆயிரத்து 500 ஆகும். அதேநேரம் இதனது விகிதாசாரம் அம்பாரை மாவட்டத்தில் இருக்கின்ற 1 இலட்சத்து 95 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளுடன் ஒப்பிடும்போது 78 வீதமாகும். இதில் முஸ்லிம் வாக்குகளின் சராசரி 78 வீதம் என்றால் பல இடங்களில் 95 வீதம் அல்லது 100 வீதம் வாக்களிக்கப்பட்டிருக்க வேண்டும். நாம் அறிந்தவரையில் பல இடங்களில் 65 வீதத்திற்கு குறைவான வாக்குகளே அளிக்கப்பட்டடிருக்கின்றன.
திடீரென அளிக்கப்படாத வாக்குகள் எல்லாம் எண்ணும்போது வந்திருக்கின்றது. எனவே இது தொடர்பாக நாம் நீதிமன்றத்திற்கு செல்வது பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கின்றோம். அதேநேரம் ஹெலி கொப்டரில் பல கோடி ரூபாய்கள் கொண்டுவந்து இறக்கப்பட்டு தண்ணீராய் செலவெளிக்கப்பட்ட சூழ்நிலைக்கு மத்தியிலும் 33 ஆயிரம் வாக்குகளை எமது கட்சிக்கு அளித்த வாக்காளர்களுக்கும், அதற்காக உழைத்த அனைத்து கட்சி போராளிகளுக்கும் நாம் நமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கடந்த பொதுத் தேர்தலில் 26 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 1 ஆசனம் கிடைத்த போதிலும், இம்முறை 33 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு ஆசனம் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கான காரணம் செயற்கையான வாக்குகளின் அதிகரிப்பாகும். எனவேதான் இது தொடர்பாக எமது வேட்பாளர்களுக்கும், போராளிகள் மற்றும் வாக்காளர்களுக்கும் நீதி கிடைப்பதற்காக நீதிமன்றத்தை நாடுவதற்கு ஆலோசிக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.