மாகாணசபை உறுப்பினர் ஜெமீல் விடுத்துள்ள ஊடக அறிக்கை!

????????????????????????????????????
????????????????????????????????????

முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கான மாற்றுத் தலைமைத்துவத்தை பலப்படுத்துவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசை அமோகமாக ஆதரித்த வாக்காளப் பெருமக்களுக்கு எனது உளம்கனிந்த நன்றியையும்பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஐ.தே.க.தேசியப் பட்டியல் வேட்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

 

“முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்காக ஸ்தாபிக்கப்பட்டு- பெரும் தியாகங்களுக்கு மத்தியில் வளர்த்தெடுக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இன்றைய தலைமைத்துவம் அதனை தனது வியாபாரக் கம்பனியாக மாற்றி அமைச்சுப் பதவிக்காகவும் சுகபோகங்களுக்காகவும் பயன்படுத்திக் கொண்டு, சமூகத்திற்கு பெரும் துரோகமிழைத்து வருகின்ற ரவூப் ஹக்கீமிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கும் இலட்சியத்துடன் நாம் இத்தேர்தலை எதிர்கொண்டோம்.

 

அல்ஹம்துலில்லாஹ், இறைவனின் உதவியால் எமது இலக்கை நெருங்கியிருப்பதையிட்டு மட்டற்றமகிழ்ச்சியடைவதுடன் அதற்காக எம்முடன் கைகோர்த்து, தொண்டர்களாக மாறிய வாக்காளர்களுக்கு எனது நன்றிப் பூக்களை காணிக்கையாக செலுத்துகின்றேன்.

 

மக்களின் விருட்சமான ஆதரவினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டவர்களுள் ஐந்து மாவட்டங்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூடிய விருப்பு வாக்குகளுடன்  வெற்றியடைந்துள்ளதன் மூலம் எமது கட்சிக்கு ஐந்து பிரதிநிதித்துவங்கள்கிடைத்துள்ளன.

 

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை முதன்முறையாக அதுவும் தனித்துப் போட்டியிட்ட எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை, அலை அலையாகத் திரண்டு மக்கள் ஆதரிக்க முன்வந்த போதிலும் இறுதி நேரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு பித்தலாட்டங்களை நடத்தி, பணத்தையும் வாரி இரைத்து வாக்குகளை சூறையாடியதன் காரணமாகவே சுமார் 1600 வாக்கு வித்தியாசத்தில் எமக்கான ஒரு ஆசனம் கைநழுவிப் போயுள்ளது.

 

இருந்த போதிலும் இத்தகைய ஏமாற்று வித்தைகளுக்கு மத்தியிலும் 33122 வாக்குகளை அளித்து எமது கொள்கையை ஏற்று, சமூக விடுதலைக்கான மாற்றுத் தலைமைத்துவத்தின் கரங்களைப் பலப்படுத்த முன்வந்துள்ள நெஞ்சங்களுக்கு மிகவும் உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

அதேவேளை நேற்று தேர்தல் முடிவில் அம்பாறை மாவட்டத்தில் வாக்குப்பதிவு 65 வீதம் எனஅறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இன்று வெளியிடப்படுள்ள பெறுபேறுகள் 75 வீத வாக்குப் பதிவைக் காட்டுகிறது. இந்த பத்து வீத அதிகரிப்பானது சுமார் முப்பதாயிரம் வாக்குகள் மோசடியாக சேர்க்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது.

 

இந்த மர்மம் குறித்து எமது கட்சி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசித்து வருகிறது என்பதையும் இதன்மூலம் எமது கட்சி ஆதரவாளர்களின் வாக்குகள் வீணாகாமல் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துக் கொள்வதுடன் இந்த முயற்சி வெற்றியடைய பிரார்த்திக்குமாறு எமது வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

 

பொதுவாக  இத்தேர்தல் முடிவுகள் எமது கிழக்கு மாகாணத்திலும் தேசிய ரீதியிலும்  அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் தலைமைத்துவத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதை பறைசாற்றுகிறது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் எமது கட்சியின் பலம் இன்னும் பன்மடங்கு அதிகரிப்பதற்கான சமிக்ஜையை இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. 

 

அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டைகள் பல சரிந்துள்ளன. திருகோணமலை, வன்னி போன்ற மாவட்டங்களில் அக்கட்சி தனது பிரதித்துவங்க்களை இழந்துள்ளன. இதன் மூலம் சமூகத்திற்கு துரோகமிழைத்து வருகின்ற ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்திற்கு முஸ்லிம் மக்கள் சாவுமணியடிக்க தயாராகியிருப்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

 

இந்நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கும் அதன் தலைமைத்துவத்திற்கும் அங்கீகாரம்வழங்கியுள்ள முஸ்லிம்களின் நம்பிக்கையையும் அபிலாஷைகளையும் சிதறடிக்காமல் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் சமூக விடுதலைக்கான தூய்மையான போராட்டத்தை சிறப்பாக முன்னெடுக்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.