-எம்.வை.அமீர், எம்.ஐ.சம்சுதீன்-
கடந்த 17-08-2015ல் இடம்பெற்ற பாராளமன்ற தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் சார்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு, 59386 வாக்குகளைப் பெற்று வெற்றியிட்டி அம்பாறையில் இருந்து வாகன பவனியில் அழைத்து வரப்பட்ட முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் தற்போது அம்பாறை மாவட்ட பாராளமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கு காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் எம்.எச்.எம்.இஸ்மாயில் தலைமையில் காரைதீவு மாளிகைக்காடு எல்லையில் வைத்து பெரு வரவேற்பு வழங்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் சாய்ந்தமருது மத்தியகுழு அமைப்பாளர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் மற்றும் மத்திய குழு செயலாளர் ஜலால் மற்றும் இபத்துல் கரீம் உள்ளிட்ட கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் புடைசூழ அழைத்துவரப்பட்ட ஹரீஸ், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா உள்ளிட்ட பள்ளிவாசல் உயர் சபையினரினால் வரவேற்கப்பட்டு அங்கு வைத்து துஆ பிராத்தனையும் செய்யப்பட்டது.
தேர்தல் சட்டத்தையும் மீறி குழுமியிருந்த ஆதரவாளர்களால் வாழ்த்துக்களும் கோஷங்களும் மகிழ்ச்சி ஆரவாரங்களும் மேற்கொள்ளப்பட்டன.
ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் சார்பில் மூன்று தொகுதிகளுக்கும் நிறுத்தப்பட்டிருந்த எச்.எம்.எம்.ஹரீஸ் உள்ளிட்ட மூவரும் வெற்றியிட்டி மாவட்டத்தையும் தங்களின் வசப்படுத்தியிருந்தமை குறுப்பிடத்தக்கது.
இறுதியில் கருத்து வெளியிட்ட பாராளமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், முஸ்லிம்காங்கிரஸினதும் அதன் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களதும் கரங்களைப் பலப்படுத்தி முஸ்லிம்களின் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள கட்சிக்கும் தனக்கும் வாக்களித்த மற்றும் உறுதுணையாக இருந்த அனைத்து மக்களுக்கும் தனது உள்ளத்தால் நன்றி தெரிவிப்பதாகவும் சமூகத்தின் விடிவுக்காக முன்னின்று உழைப்பதாகவும் தெரிவித்தார்.