எட்டாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுவருகின்ற நிலையில் இதுவரை 8.2 மில்லியன் வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து வாக்குச் சீட்டுக்களும் விநியோகித்து முடிக்கப்படவுள்ள நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காரணம் தேர்தல் வாக்களிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் வாக்காளர்களுக்கு வாக்களிப்பு அட்டைகளை விநியோகித்துவிடவேண்டியது அவசியமாகும்.
இதேவேளை வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் அருகில் உள்ள தபால், உப தபால் நிலையங்களுக்குச் சென்று ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்று தபால் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தேர்தல் ஆணையாளர் இதேவேளை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹம்மட் தகவல் வெளியிடுகையில்,
எட்டாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் வாக்களிப்பு 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக தற்போது வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. நாளை ஞாயிற்றுக்கிழமை விசேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு வாக்காளர் அட்டைகள் விநியோகம் இடம்பெறும்.
எனவே ஞாயிற்றுக்கிழமை வாக்காளர்கள் வீடுகளில் இருந்தால் வாக்காளர் அட்டைகளை பெறலாம். ஆனால் வாக்காளர்கள் வீடுகளில் இல்லாவிடின் பெற முடியாமல் போய்விடும். அவ்வாறானவர்கள் உடனடியாக அருகில் உள்ள தபால் நிலையத்
துக்கு சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திவிட்டு வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம்.
2 இலட்சம் அரச ஊழியர்கள் பணியில் மேலும் தேர்தல் செயற்பாடுகளுக்காக சுமார் இரண்டு இலட்சம் அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்களிப்பு நடவடிக்கைகளில் 125000 அரச ஊழியர்களும் வாக்கு எண்ணும் செயற்பாடுகளில் 75000 அரச ஊழியர்களும் ஈடுபடவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
25000 பொலிஸார் அத்துடன் பாதுகாப்பு கடமையில் சுமார் 25000 பொலிஸார் ஈடுபடவுள்ளனர். ஒரு வாக்களிப்பு நிலையத்துக்கு இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடவுள்ளனர். அத்துடன் நடமாடும் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கண்காணிப்பு அதிகாரிகள் வாக்களிப்பு செயற்பாடுகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிக்கவுள்ளனர். இதேவேளை தேர்தல் திணைக்களத்தினதும் மேற்பார்வை அதிகாரிகள் தேர்தல் வாக்களிப்பை மேற்பார்வை செய்யவுள்ளனர். அதாவது ஐந்து அல்லது ஆறு வாக்களிப்பு நிலையங்களை ஒரு அதிகாரி பார்வையிடுவார். 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மேற்பார்வை செயற்பாட்டில் ஈடுபடுவார்கள் என்றார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 50 இலட்சத்து 44490 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
12021 வாக்களிப்பு நிலையங்கள் அத்துடன் நாடு முழுவதும் 12021 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் தேர்தலானது 2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடைபெறவுள்ளது.
17 ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது பாராளுமன்றத்தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் சார்பாக 6151 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
2010 பாராளுமன்றத் தேர்தல் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 144 ஆசனங்களை பெற்றிருந்ததுடன் ஐக்கிய தேசிய கட்சி 60 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டது. மேலும் ஜனநாயக தேசியக் கூட்டணி 7 ஆசனங்களையும் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு 14 ஆசனங்களை பெற்றிருந்தன.