ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாக எந்தவொரு காரியத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது பண்டாரநாயக்க பரம்பரையோ மேற்கொள்ள முடியாது. அவ்வாறு செயற்படுவது பண்டாரநாயக்க பரம்பரைக்கு செய்யும் துரோகமாகும் என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க இன்று ஐக்கிய தேசிய கட்சியன் பேச்சாளராக மாறியுள்ளமை வேதனையளிக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜனக பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்திருப்பதாவது,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரான சந்திரிகா பண்டாரநாயக இன்று ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளராக மாறியுள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கின்றேன். ஐ.தே.கட்சிக்கு சார்பான எந்தவொரு காரியத்தையும் சுதந்திரக் கட்சியாலோ அல்லது பண்டாரநாயக்க பரம்பரையினாலோ மேற்கொள்ள முடியாது.
அவ்வாறு மேற்கொள்வது என்பது பண்டாரநாயக்க பரம்பரைக்கும் சந்திரிகாவின் பெற்றோருக்கும் செய்யும் துரோகமாகும். மஹிந்தவிற்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கைகளை சந்திரிகா கைவிட வேண்டும். அவரது கருத்துக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்துள்ளது. இவை எமக்கு வேதனையளிக்கின்றது என்றும் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.