முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இனவாத அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். இனவாத அரசியல் இல்லாத ஒரே தெரிவு ஐக்கிய தேசிய முன்னணியாகும் என புத்தசாசன மற்றும் உள்ளூராட்சி துறை அமைச்சர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.
மேலும் நிரந்தர அரசாங்கமொன்றை உருவாக்குவதன் மூலமே சர்வதேசத்துடன் ஒன்றிணைந்து செயற்பட முடியும். ஆகவே இத்தகைய போக்கிற்கு நாம் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புத்தசாசன மற்றும் உள்ளூராட்சி துறை அமைச்சர் கரு ஜெயசூரிய நேற்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வழங்கும் ஆணையிலேயே இந்த நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. புதிய பாராளுமன்றத்தின் ஊடாக அரசியலமைப்பு மறுசீரமைப்பு , பொருளாதார அபிவிருத்தி, ,நாட்டின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான கட்சியையே தெரிவு செய்ய வேண்டியுள்ளது.
ஆகவே தற்போதைக்கு மேற்குறிப்பிட்ட அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு உரிய கட்சியினுடைய தேவை எமக்கே உள்ளது. ஆகவே நாட்டை ஆட்சி செய்வதற்கு தகைமையான ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும்.
மஹிந்த ராஜபக் ஷ இனவாதத்தை கொண்டு அரசியல் செய்து வருகின்றார். எனினும் இனவாத அரசியல் இல்லாத ஒரே தெரிவு ஐக்கிய தேசிய முன்னணியாகும்.இனவாத கட்சிகளை உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென்று சர்வமத பேரவை குறிப்பிட்டது. ஆகவே இனவாதம் முழுமையாக இல்லாமல் செய்யப்படவேண்டும்.
மேலும் நிரந்தர அரசாங்கமொன்றை உருவாக்குவதன் மூலம் சர்வதேசத்துடன் ஒன்றிணைந்து செயற்பட முடியும். ஆகவே இத்தகைய போக்கிற்கு நாம் தயார்.இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.