ரமழான் காலத்தில் முஸ்லிம் பொலிஸாருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

 
புனித ரமழான் மாதத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமது மத அனுஷ்டானங்களை தடையின்றி மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்தார். 
பொலிஸ்மா அதிபருக்கு இராஜாங்க அமைச்சர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், 
பொலிஸ் சேவையில் ஏராளமான முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி புரிகின்றனர். இப்தார், சஹர், தராவீஹ் தொழுகை மற்றும் ஏனைய வழமையான கடமைகளை அவர்கள் ஒழுங்கான முறையில் நிறைவேற்ற வேண்டியுள்ளது. 
இதற்கமைய, புனித ரமழான் மாதத்தில் சேவையில் ஈடுபடுகின்ற முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமது மத அனுஷ்டானங்களை தடையின்றி மேற்கொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கடந்த மே 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொலிஸ்மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தேன்.  
விசேடமாக, தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற வானிலை காரணமாக பொலிஸாரின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சேவையில் உள்ள முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இரவு நேரங்களில் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்களாயின் நோன்பு நோற்பதற்கும், இரவு நேர வணக்கங்களை மேற்கொள்வதற்கும் பாதிப்பாக அமையும். எனவே, பொலிஸார் எதிர்நோக்கியுள்ள இவ்வாறான பிரச்சினைகளை சுட்டிக்காட்டி அவர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்குமாறும் பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டேன். – என்றார்.