கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவுத்துறையின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், இதை ரஷ்யா மற்றும் அமெரிக்கா மறுத்து வந்தது. மேலும், பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க ஆயுத சேவை செனட் குழுவின் தலைவராக உள்ள ஜான் மெக்கைன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சித்து ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். “ ஐ.எஸ் தீவிரவாதிகளை விட உலக பாதுகாப்புக்கு புதின் ஆபத்தானவர். எனது பார்வையில் ரஷ்யர்களை சவாலாக எதிர்கொள்ள வேண்டும். ரஷ்யாவுக்கு எதிராக பல தடைகளை நாங்கள் வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளோம். இனியும் பல தடைகளை புதிதாக விதிப்போம்” என பரபபரப்பு அளிக்கும் விதமாக அவர் பேசியுள்ளார்.
மேலும், தனது பேட்டியில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பாதுகாப்பு படைகள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார். அவர் நாட்டின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைகளை பரிசீலித்து முடிவெடுக்கிறார் எனவும் மெக்கைன் தெரிவித்துள்ளார்.