ஊடகப்பிரிவு
இலங்கையின் வர்த்தக வரலாற்றில் முதல் தடவையாக கம்பனிகளை இலத்திரனியல் அடிப்படையில் தன்னியக்க முறையில் பதிவு செய்யும் திட்டமொன்றுக்கான ஒப்பந்தம் இன்று காலை (30.05.2017) வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.
கம்பனி பதிவாளர் திணைக்களத்திற்கும், கே.பி.எம்.ஜீ – ஸ்ரீலங்காவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் தொடர்பான திட்டத்தை அமுல்ப்படுத்த 57மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. இந்தத் தொகையை கம்பனி பதிவாளர் திணைக்களம், வரியிறுப்பாளர்களிடமிருந்து அறவிடாமல் கம்பனி பதிவாளர் நிதியத்திடமிருந்து பெற்று வழங்குகின்றது.
இந்த புதிய திட்டம் இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்படுவதோடு, மார்ச் இறுதியில் நிறைவுபெறுகின்றது. அதன் பின்னர் ஒரே நாளில் புதிய கம்பனிகளை இலத்திரனியல் முறையின் கீழ்; ஒன்லைனில் பதிவு செய்து கொள்ள முடியும். இதுவரை காலமும் ஒரு கம்பனியை பதிவு செய்வதற்கு இருந்த பல்வேறு சிரமங்கள் இந்த புதிய முறை மூலம் நீக்கப்படுவதோடு மாத்திரமின்றி மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய தேவையும் இல்லை.
வெளிநாடுகளில் வாழ்வோர் ஒரு கம்பனியை இலங்கையில் பதிவு செய்ய வேண்டுமாயின், இங்கு வந்து சிரமப்பட வேண்டியிருந்த நிலை இனிமேல் இருக்காது. அவர்கள் தமது ஆவணங்களையும், கடவுச்சீட்டு மற்றும் விபரங்களையும் ஒன்லைன் மூலம் வழங்கி அவை சரிபார்க்கப்பட்ட பின் தமது கம்பனியை ஒரே நாளில் பதிவு செய்து கொள்ள இந்த புதியத் திட்டம் வழிவகுக்கின்றது. அத்துடன் வெளிநாடுகளில் உள்ளோர். தமது கிரடிட் காட்டின் மூலம் கட்டணங்களை செலுத்த முடியும்.