ஜெயலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் பவானிசிங் நியமனத்துக்கு எதிரான மனு மீதான விசாரணை நாளை!

bhavani singh (1)

 பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடந்து வந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜரானார். 

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், 4 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடியும், தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. 

இதை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்தது. 

இந்த மனு மீதான விசாரணையின் போதும் பெங்களூரு ஐகோர்ட்டில் பவானிசிங்கே ஆஜரானார். இந்த விசாரணை முடிந்து தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ஒத்தி வைத்து இருக்கிறார். 

இதனிடையே மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இருந்து பவானிசிங்கை நீக்கவேண்டும் என்று கோரி தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஆர்.பானுமதி ஆகியோர் விசாரித்தனர். 

கடந்த 15-ந் தேதி அவர்கள் ஒருவருக்கொருவர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். பவானி சிங்கின் நியமனம் செல்லும் என்று நீதிபதி பானுமதியும், செல்லாது என்று மதன் பி.லோகுரும் தீர்ப்பு அளித்தனர். இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணையை 3 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றுமாறு அவர்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்துவிடம் பரிந்துரைத்தனர். 

இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, பவானி சிங் நியமனத்தை எதிர்க்கும் அன்பழகனின் மனுவை விசாரிக்க நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால் மற்றும் பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் கொண்ட 3 பேர் அமர்வை அமைத்து உத்தரவிட்டார். இந்த அமர்வு பவானி சிங் நியமனத்துக்கு எதிரான அன்பழகனின் மனு மீது நாளை செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்துகிறது.