அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை சர்வதேச இருபதுக்கு 20 போட்டித் தொடராக நடத்துவதற்கு ஆசிய கிரிக்கெட் சபை ஆராய்ந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் என, ஆசிய நாடுகள் இணைந்து ஆசிய கிரிக்கெட் சபையை (ஏ.சி.சி.) 1983 இல் உருவாக்கப்பட்டது. இதன் சார்பில் 1984 முதல் 2 ஆண்டுக்கு ஒரு முறை, ஆசிய நாடுகள் மாத்திரம் பங்கேற்கும் ஆசிய கிண்ணத் தொடர் ஒருநாள் போட்டித் தொடராக நடத்தப்படுகின்றன. இதுவரை நடைபெற்ற 12 தொடர்களில் இலங்கை, இந்திய அணிகள் அதிகபட்சமாக தலா 5 முறை சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கிண்ணத் தொடரை சர்வதேச இருபதுக்கு 20 தொடராக மாற்றியமைக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் செய்யது அஷ்ரபுல் ஹக் கூறியுள்ளதாவது: “அடுத்த ஆண்டு மார்ச் 11ஆம் திகதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை ‘சர்வதேச இருபதுக்கு 20’ உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னோடியாக இருக்கும் வகை யில், 2016ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண தொடரை, இருபதுக்கு 20 தொடராக நடத்தவுள்ளோம். இதன் பின்னர், 2019 இல் இங்கிலாந்தில் நடக்கும் 50 ஓவர் உலகக் கிண்ண போட்டி நடைபெறும்போது, அதனை கருத்தில் கொண்டு, 2018 ஆசிய கிண்ணத் தொடரை, மீண்டும் சர்வதேச ஒருநாள் தொடராக நடத்தவுள்ளோம். 2020இல் மீண்டும் ஆசிய கிண்ணத் தொடர் இருபதுக்கு 20 தொடராக நடைபெறும். ஏனெனில், ஆப்கானிஸ்தான், நேபாளம், ஹொங்கொங், ஐக்கிய அரபு இராச்சிய, அணி கள் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை விளையாடும் அந்தஸ்தை பெற்று ள்ளன. இந்த அணிகளுக்கு உதவும் வகை யில் இவ்வாறு மாற்றி அமைக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார். |