இதயத்தை இயங்கச் செய்வதும், நிறுத்துவதும் எமது கைகளிலேயே உள்ளது – மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர்

அபு அலா –

எமது இதயம்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாகும். இந்த இதயத்தை இயங்கச் செய்வதும், நிறுத்திவிடுவதும் நமது ஒவ்வொருவரின் கைகளில்தான் உள்ளது. இதை இயங்கச் செய்வதா? அல்லது நிறுத்திவிடுவதா? நன்கு சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் அனைவரும் இருந்து வருகின்றோம். என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் உச்சபீட உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளர் ஏ.எல்.எம்.அமானுல்லா தலைமையில் ஒலுவிலில் இடம்பெற்ற கூட்டத்துக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எமது இதயத்தை இயங்க முயற்சி செய்யவில்லை என்றால் எமது மூச்சி போய்விட்டதற்குச் சமமாகும். மூச்சி இல்லை என்றால் நாம் அனைவரும் மரணித்ததற்கு சமம் என்றுதான் கூறவேண்டும். நாம் மரணித்த பிறகு எம்மால் எதுவுமே செய்யமுடியாது. நமது மூச்சை நாம் நிறுத்துவதற்கு யாராவது முன்னிற்பார்களா? இல்லவே இல்லை. நாம் பல்லாண்டுகாலம் வாழவேண்டும் என்றுதான் நினைப்போம் இதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயற்பாடாகும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றினைந்து எமது இதயத்தை பல்லாண்டு காலம் வாழவைக்க முன்வரவேண்டும்.

நமது உடம்பில் காயங்கள் ஏற்பட்டால் அதனை எப்படியாவது சரிசெய்யவேண்டும் என்று டாக்டரை நாடி அந்த காயங்களை ஆற்றிவிட முயற்சி செய்கின்றோம். அதேபோல்தான் எமது கட்சிப் போராளிகளிடம் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சினைகளை எல்லாம் நாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் அதனை மறந்தவர்களாக ஒற்றுமைப்பட்டு எமது கட்சியையையும், நமது அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் 3 வேட்பாளர்களையும் வெற்றிபெற பாடுபடவேண்டும்.

எமக்கு கிடைத்திருக்கும் தலைமை ஒரு சானாக்கியமுள்ள, மிகத் திறமையான முறையில் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், எமது சமூகத்துக்காக குரல் கொடுக்கும் தலைமை எம்முடன் இருக்கும்போது நாம் எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இன்று எமது கட்சியினால் தொழில் வாய்ப்புக்கள் சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால் பலர் கோபம் கொண்டவர்களாக இருக்கின்றனர். எமது தலைமை நல்ல நிலையில் இருக்கப்போய்த்தான் இந்த தொழில் வாய்ப்புக்களை வழங்க நேரிட்டது. இல்லை என்றால் எப்படி இந்த தொழில் வாய்ப்புக்களை வழங்கியிருக்க முடியும் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இதனை சில சில்லரை அரசியல்வாதிகள் தங்களின் சுயநல அரசியல் இலாபங்களை கருத்திற்கொண்டு எமது கட்சிக்கெதிராகவும், சமூகத்துக்கெதிராகவும் பல சதித்திட்டங்களைத்தீட்டி செயற்பட்டு வருகின்றனர். இதனை நாம் முறியடித்து எமது கட்சியின் வெற்றியை பலப்படுத்தி இவ்வாறானவர்களை ஓடொட விரட்டியக்க நாம் அனைவரும் எமக்குள் இருக்கும் கோபதாபங்களை இன்றிலிருந்து மறந்து எமது கட்சியின் வெற்றிக்காக பாடுபடுவோம்.

இவ்வாறு செய்வதன் மூலம்தான் எமது சமூகத்துக்காக குரல் கொடுப்பதற்கும், எதிர்காலத்தில் இன்னும் பலபேருக்கு பல தொழில் வாய்ப்புக்களை பெறுவதற்கும், பல அபிவிருத்தித் திட்டங்களை பெறுவதற்கும் முடியும். அதற்காக எமது தலைமை பல திட்டங்களை வகுத்துள்ளது. தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை என்றோ அல்லது அபிவிருத்தி நடக்கவில்லை என்றோ நீங்கள் யாரும் கலலைப்படவேண்டாம். என்றார்.