தமிழர் உரிமைக்காக ஓங்கி ஒலித்த அமிர்தலிங்கத்தின் மறைவு பேரிழப்பாகும்; கல்முனை முதல்வர் அனுதாபம்!

 

அஸ்லம் எஸ்.மௌலானா

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமைக்காகவும் குரல் எழுப்பி வந்த கல்முனை மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கம் அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும் எதிர்க் கட்சித் தலைவருமான ஏ.அமிர்தலிங்கம் இன்று சனிக்கிழமை காலை காலமானார்.

image

அவரது மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் முதல்வர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

“அண்ணன் அமிர்தலிங்கம் என்று நாம் செல்லமாக அழைக்கின்ற எமது மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவரான அமிர்தலிங்கம் ஐயா எம்முடன் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் நாகரிகமாகவும் நடந்து கொள்கின்ற ஒரு முதுர்ச்சியான அரசியல் வாதியாகத் திகழ்ந்தார்.

மாநகர சபை அமர்வுகளிலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் அவர் ஆற்றுகின்ற உரைகள் அறிவுபூர்வமாகவும் யதார்த்தமானதாகவும் அமைந்திருக்கும் என்பதுடன் எப்போதும் தனது சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காக மிகவும் துணிச்சலுடன் அவரது குரல் ஓங்கி ஒலித்தது. அத்துடன் தமிழ், முஸ்லிம் சமூகங்களிடேயே நல்லுறவை கட்டியெழுப்பும் வகையிலேயே அவரது கருத்துகள் அமைந்திருந்தன.

சில பிரச்சினைகளின் போது சில உறுப்பினர்கள் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு இனவாதம், பிரதேசவாதம் பேசுகின்ற போதிலும் அண்ணன் அமிர்தலிங்கம் அவர்கள் மிகவும் பக்குவத்துடன் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைத்தே கருத்துகளை வெளியிட்டு வந்துள்ளார். அவரது இங்கிதமான நடத்தையும் பண்பாடும் எம்மை அவருக்கு அடிமைப்படுத்தியது என்று கூறினால் அது மிகையாகாது.

கல்முனை மாநகர சபையின் முதலாவது மக்கள் பிரதிநிதிகள் சபையிலும் தற்போதைய இரண்டாவது சபையிலும் தொடர்ச்சியாக உறுப்பினராக இருந்து வந்த மூத்த அரசியல் வாதியான அண்ணன் அமிர்தலிங்கம் ஏனைய உறுப்பினர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

இக்காலப் பகுதியில் தான் சார்ந்த மக்களின் பிரச்சினைகள், தேவைகளை சபைக் கூட்டங்களிலும் தனிப்பட்ட முறையில் முதல்வர், ஆணையாளர் மற்றும் அதிகாரிகளிடமும் பிரஸ்தாபித்து நிறைவேற்றிக் கொடுப்பதில் கூடிய கரிசனை காட்டி வந்தார்.

இந்த சூழ்நிலையிலேயே அவர் சிறிது காலமாக சுகவீனமுற்றிருந்து வந்த நிலையில் இன்று மரணமடைந்துள்ளார். நான் அதிகாரிகள் சகிதம் கடந்த புதன்கிழமை அவரை இறுதியாக சென்று பார்வையிட்டபோது எம்முடன் உரையாடியதை நினைத்துப் பார்க்கையில் அவரது மரணச்செய்தி என்னை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அன்னாரது மறைவுக்காக அவரது மனைவி, பிள்ளை மற்றும் குடும்பத்தினருக்கு தனிப்பட்ட வகையிலும் எமது மாநகர சபை சார்பிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.