இமாச்சல்-உத்தரகாண்ட் முதலமைச்சர்கள் பதவி விலக பா.ஜனதா வலியுறுத்தல் !

 

91b12314-9935-400b-bd9a-a83019dbb271_S_secvpf

ஐ.பி.எல். ஊழல் வழக்கில் சிக்கிய லலித் மோடிக்கு உதவியதாகக் கூறி மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் பதவி விலகவேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இக்கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத்தையும் நடத்த விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், 4-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. 

இதற்குப் போட்டியாக பா.ஜனதா கட்சியும் காங்கிரஸ் முதலமைச்சர்களை குறிவைத்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. 

அந்த வகையில், இமாச்சல பிரதேச முதலமைச்சர் வீரபத்ரசிங், உத்தரகாண்ட் முதலமைச்சர் ஹரிஷ் ராவத் ஆகியோர் ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்கள் பதவி விலக வேண்டும் என இன்று வலியுறுத்தி உள்ளது. 

இதுபற்றி பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் தருண் சக் கூறுகையில், “வீரபத்ர சிங் மற்றும் ஹரிஷ் ராவத் ஆகியோர் ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளன. அவர்களை சோனியாவும், ராகுல் காந்தியும் பாதுகாக்கின்றனர். 

மத்திய மந்திரி சுஷ்மா, பா.ஜனதா முதலமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், வசுந்தரா ராஜே ஆகியோர் மீது எந்தவித ஆதாரமும் இன்றி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இதற்காக பாராளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கி வருகிறது. அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் விவாதம் நடத்த பா.ஜனதா தயாராக உள்ளது” என்றார்.