ஜனவரி 8 ஆம் திகதி ஜனநாயக புரட்சியினூடாக உதயமான மைத்திரி- –ரணில் உறவினூடாக நல்லாட்சியும் ஜனநாயகமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக நிதி முகாமைத்துவம் சரிவர நிர்வகிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மேலும் கோல்டன் கீ வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஓய்வுப் பெற்ற நீதியரசர் தலைமையிலான குழுவொன்றை நியமிக்கவுள்ளேன். இதனூடாக குறித்த மோசடிகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியாக தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற கோல்டன் கீ வங்கி வைப்பாளர்களுக்கு உரிய நிதித்தொகையை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் அங்கு உரையாற்றுகையில்,
கோல்டன் கீ வங்கி நிதி ரீதியாக பின் தள்ளப்பட்டதன் காரணமாக குறித்த வங்கியில் வைப்பிலிட்ட வைப்பாளர்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தனர். இதன்காரணமாக தமது வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டது.
அத்துடன் மனதளவில் பலர் பாதிக்கப்பட்டனர். இதனால் பலர் தமது உயிரை பணயம் வைத்தனர். நாட்டில் பொருளாதார துறையிலும் பாரிய சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் நாட்டின் வங்கிகள் தொடர்பிலான நிதி செயற்பாடுக்ள் தொடர்பில் நாட்டு அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும். நாட்டின் வங்கிகள் ரீதியான நிதி பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தினால் ஒருபோதும் தட்டிக்கழித்து செயற்பட முடியாது.
அதேபோன்று அரசாங்கத்தை மீறி எந்தவொரு தனியார் நிறுவனத்தினாலும் செயற்பட முடியாது. இது சர்வதேச நாடுகளிலும் பரவலாக அமுலாக்கப்பட்டு வரும் செயற்பாடாகும். அரச நிதி துறை சார்ந்த முகாமைத்துவம் சரிவர கடைப்பிடிக்கப்படாமையின் காரணமாகவே கோல்டன் கீ போன்ற சர்ச்சைகள் ஏற்படுகின்றன.
முன்னைய ஆட்சியின் போது நிதி முகாமைத்துவம் சரிவர கடைப்பிடிக்க படாது போனாலும், ஜனவரி 8 ஆம் திகதி மக்களினால் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தின் பின்னர் நிதி முகாமைத்துவம் சரிவர பேணப்பட்டது.
மேலும் மைத்திரி- – ரணில் உறவின் காரணமாக நாட்டில் நல்லாட்சியும் ஜனநாயகமும் உறுதிப்படுத்தப்பட்டதன் விளைவாக நாட்டின் நிதித்துறை முகாமைத்துவமும் சரிவர நிர்வகிக்கப்படுகின்றது. இந்த ஆட்சிக் காலத்தின் போது ஊழல் மோசடிகள் முழுமையாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே கோல்டன் கீ வைப்பாளர்களுக்கு உரித்தான சொத்துக்கள் கட்டம் கட்டமாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.