பேதங்களை மறந்து சமூக அரசியல் பலத்தை உறுதிப்படுத்துவோம்; கல்முனை முதல்வர் வேண்டுகோள்!

Mayor-Nizam-41அஸ்லம் எஸ்.மௌலானா
அடுத்த ஐந்து வருடங்கள் நாட்டின் அரசியல் சூழல் பாரிய சவாலுக்குட்படவுள்ளதால் முஸ்லிம்கள் அனைவரும் பேதங்களை மறந்து ஒற்றுமைப்பட்டு சமூகத்தின் அரசியல் பலத்தை உறுதிப்படுத்த வேண்டும் என கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
முஸ்லிம் சமூகம் இன்று ஒரு முக்கிய கட்டத்தில் இருக்கிறது. கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மார்க்க ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர். ஆனால் ஜனவரி-8 ஆட்சி மாற்றத்தினால் உருவான நல்லாட்சி காரணமாக அப்பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ள போதிலும் அந்த நல்லாட்சி தகர்க்கப்பட்டு, முஸ்லிம்கள் மீண்டும் வஞ்சிக்கப்படுவார்களோ என்கிற பாரிய அச்சம் இன்று எழுந்துள்ளது.
ஆகையினால் நல்லாட்சி கேள்விக்குறியாக மாறுகின்ற அபாயம் தோன்றியுள்ள இக்கால கட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது. இது குறித்து இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் கடுமையாக சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது.
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று ஈமானிய பலத்தை அதிகரித்துக் கொண்டுள்ள முஸ்லிம்கள் தமது சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் கூடிய கரிசனை செலுத்த முன்வர வேண்டும் என்பதுடன் அதற்காக எம்மை அர்ப்பணிக்க தயாராவோம் என இப்புனிதத் திருநாளில் அழைப்பு விடுக்கின்றேன்.