நிந்தவூரில் நாளை கூட்டாக ‘சகாதுல் பித்ர்’ விநியோகம் !

Zakat_al_Fitr_Grains

சுலைமான் றாபி

ஜம்மிய்யதுல் உலமா சபையின் நிந்தவூர் கிளை மற்றும் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் ஆகியவை இணைந்து இம்முறை முதன் முறையாக நிந்தவூரில் கூட்டாக ‘சகாதுல் பித்ர்’ விநியோகம் செய்யவுள்ளது.

அந்த வகையில் நிந்தவூரில் காணப்படும் 28 பள்ளிவாசல்களிலும் இருந்து சேகரிக்கப்பட்ட சகாதுல் பித்ர் பொருட்களை அப்பள்ளிவாசல்களின் ஊடாக சகாதுல் பித்ர் பெறத் தகுதியானவர்களுக்கு நாளை (17) வெள்ளிக்கிழமை அஷர் தொழுகையினைத் தொடர்ந்து நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளது.

இதில் ரூபா1,500 பெறுமதியான 350 பொதிகள் விநியோகிக்கப்படவுள்ளதாக ஜம்மிய்யதுல் உலமா சபையின் நிந்தவூர் கிளையின் தலைவர் அல்-ஹாஜ் எம்.ஐ. ஜௌபர் (பலாஹி) தெரிவித்தார். மேலும் எதிர்வரும் காலங்களில் இந்த சகாதுல் பிதிரினை  விநியோகிப்பதற்கு தனியான வாரியம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் மூலம் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த சகாதுல் பித்ர் ஆனது முஸ்லீம்களால் கொண்டாடப்படும் நோன்புப் பெருநாளைக்கு முதல் இவைகள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டு அவர்கள் பெருநாள் தினத்திலே சந்தோஷமாக சமைத்து உண்ணுவதற்கான வழி வகைகளை  ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாம் கூறும் சகாதுல் பித்ர் கடமைகளில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.