எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப் போவது மோசடிக்காரர்களையா? அல்லது நேர்மையான திறமையானவர்களையா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். திருடர்களுக்கும் மோசடிக்காரர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்காதமைக்கு மன்னிப்பு கோரிய மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அவர்களுடனே தேர்தலில் போட்டியிடுகின்றார் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்தார்.
அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம் பெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஊழல், மோசடிக்காரர்கள் மற்றும் போதைப் பொருளுடன் தொடர்புடையவர்களின் பெயர்கள் சுதந்திரக் கட்சி வேட்பு மனுவில் இடம்பெறாது என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். என்றாலும் தற்போது அப்படியானவர்கள் எவ்வாறு இடம் பெற்றார்கள் என்பதை ஜனாதிபதி நாட்டு மக்களுக்குத் தெளிவாகக் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேம் ஜயந்தவை அச்சுறுத்தியே மஹிந்த ராஜபக் ஷ உட்பட மோசடிக்காரர்களின் பெயர்கள் வேட்புமனுவில் இடம்பெற்றுள்ளன.சுசில் பிரேம்ஜயந்தவும் தன்னுடைய குற்றங்களை மறைத்துக் கொள்வதற்கு அதற்கு அனுமதித்துள்ளார்.
மேலும் மஹிந்த ராஜபக் ஷ தனது மோசடிகளை மறைப்பதற்கும் தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது பாராளுமன்றச் சிறப்புரிமையைப் பயன்படுத்தவும் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
அவர் பாராளுமன்றம் சென்றாலும் கூடியகாலம் இருக்க முடியாது. அவருக்கு எதிராக பாரிய குற்றச் சாட்டுக்கள் இருக்கின்றன. அவை விசாரிக்கப்படும் பட்சத்தில் அவர் சிறைச்சாலைக்கு செல்வார்.
இந்த நாட்டை ஆட்சிபுரிந்த சகல ஜனாதிபதிகளுக்கும் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. என்றாலும், அவர்களது குடும்பங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இருக்கவில்லை. ஆனால் மஹிந்த ராஜபக் ஷ மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பாரிய குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
கடந்த காலத்தில் ஊழல், மோசடிகளில் தொடர்புபட்டவர்கள் அனைவரும் களமி றங்கியுள்ளனர். இதனை சிறந்ததொரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் நல்லதொரு பாடத்தைக் கற்பிக்க வேண்டும். அத்துடன் இவர்களுக்கு துணையாக இருந்த சுசில் பிரேம் ஜயந்தவுக்கும் கொழும்பு மாவட்ட மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.
மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை பயன்படுத்தியமைக்காக கொடுக்க இருந்த கடன்களை செலுத்தியதாக அனுர பிரியதர்ஷன யாப்பா அண்மையில் கூறியுள்ளார். ஆனால் இதுவரை கடன்களை செலுத்தவில்லை. முடியுமானால் அதற்குரிய பற்றுச் சீட்டுக்களுடன் பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும்.
எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வது ஊழல், மோசடிக்காரர்களையா அல்லது நேர்மையானவர்களையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார்.