ஜனாதிபதியின் முழு உரை !

Maithripala_Sirisena

கடந்த இரண்டு வாரங்களில் தான் தாக்கப்பட்டதைத் போன்று, எந்தவொரு ஜனாதிபதியும் தாக்கப்பட்டதில்லை எனவும், துஷ்டன் எனவும் துரோகி எனவும் அழைக்கப்பட்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை பதவியை ஏற்றுக்கொள்ள தான் எடுத்த தீர்மானம் சரியானது என்றும் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தோற்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஊடவியலாளர்களை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து தோல்வியடைவார். அவருக்கு வேட்பு மனு கொடுப்பதற்கு நான் கடுமையான அதிருப்தியை வெளியிட்டு இருந்தேன். எழுத்து மூலமாகவும் எனது அதிருப்தியை தெரிவித்திருந்தேன் என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ இருந்திருந்தால், 100நாட்கள் திட்டத்தினையும் மக்களுக்கான பயன்களையும் அவர்கள் ஆதரித்திருக்க மாட்டார்; என்றும் ஜனாதிபதி  தெரிவித்தார்.

முன்பை விட இப்போது ஊடக சுதந்திரம் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், தன்னை நோக்கி ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களை ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னதாக அவர்கள் பயன்படுத்தியிருந்தால், அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

தன்னை துரோகி என இன்று அழைக்கும் அரசியல் விமர்சகர்களையும் ஊடகத்தினரையும், ஜனநாயகத்தின் வாசத்தை சுவைக்குமாறு சொல்வதாகத் அவர் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ தவறிலைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை உருவாக்கினார். அவரே தவறிழைத்துள்ளார் அதற்காக ஒருவருக்கு ஒருவர் குற்றஞ்சாட்ட வேண்டாம் என்றும் அவர் கூறினார்;. மத்திய வங்கியின் ஆளுநரை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் கேட்டுக்கொண்டேன் என்றார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு நான் எதிரானவன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெறுமாயின், பிரதமராக நியமிக்கப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பல சிரேஷ்ட தலைவர்கள் உள்ளனர்;. எதிர்காலத்தை கணிப்பிடும் சோதிடர் நான் அல்ல, எனினும், கடந்த கால அனுபவங்களை கொண்டு எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே அறிவிப்பேன் என்றார்.
சுதந்திரக்கட்சி பிளவு படுவதற்கு இடமளியேன். மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தோல்வியடைவார்.  மீண்டும் தோல்வியடைவார். எதிர்காலத்திலும் தோல்வியடைவார் என்றும் அவர் கூறினார்.

பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பின்னர், அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்  தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகக் கொண்டுவர முயன்றனர். அந்த எல்லா முயற்சிகளையும் நான் தோற்கடித்தேன்.

நாடாளுமன்றம் மூழ்குவதை நான் அனுமதிக்கவில்லை. பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டபோது, நான் நாடாளுமன்றைக் கலைத்தேன்.

எந்தக் கட்சியாக இருந்தாலும், நான் ஜனவரி 8ஆம் திகதி வழங்கிய வாக்குறுதிகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய நாடாளுமன்றம் ஒன்று வேண்டும்.

பொதுத் தேர்தலில், கட்சியொன்று வெற்றிபெறுவது எனக்குத் தேவையானதல்ல. ஜனவரி 8இல் வழங்கப்பட்ட ஆணையை நிறைவேற்றக்கூடிய பெரும்பான்மையான உறுப்பினர்கள் தேவை.

இந்தத் தேர்தலில் நான் நடுநிலை வகிப்பேன், அத்தோடு தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடத்த நான் அதிகாரிகளுக்கு ஆதரவு வழங்குவேன் என்றார்.