ரமழான் பண்டிகையையொட்டி அரசாங்க ஊழியர்களின் ஜூலை மாதச் சம்பளம் எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளது. இதற்கான சுற்றுநிருபம் திறைசேரிச் செயற்பாடுகள் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.டி.ரணசிறியினால் வெளியிடப்பட்டுள்ளது.
4/2015 இலக்கமும், 2015.07.08 ஆம் திகதியுமிட்ட திறைசேரிச் செயற்பாடுகள் சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதிய ரமழான் பண்டிகையின் பொருட்டு ஜூலை மாதச் சம்பளத்தை முன்கூட்டியே வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை கவனத்திலெடுத்து, வேண்டுகோள்விடும் இஸ்லாமிய அரச ஊழியர்களின் சம்பளத்தை 17 ஆம் திகதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கொடுப்பனவுக்குரிய கட்டுநிதியை திறைசேரிக்குக் கிடைக்கப் பெறும் வேண்டுகோளுக்கமைய வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் இக்கொடுப்பவை ஜூலை 17 ஆம் திகதி வழங்குவதற்கான ஏற் பாடுகளை மேற்கொள்ளவும்.
சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், சகல மாகாண சபைகளின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், இராணுவ, கடற்படை, விமானப்படைத் தளபதிகள் ஆகியோருக்கும் இச்சுற்றுநிருபம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
புனித ரமழான் பண்டிகையையொட்டி அரச ஊழியர்களின் ஜூலை மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அரசுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், இவ்விடயம் தொடர்பில் முன்கூட்டியே கோரிக்கை விடுத்த தொழிற் சங்கங்களுக்கும் முஸ்லிம் அரச ஊழியர்க ளும் நன்றி தெரிவித்துள்ளன