ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலைத் தயாரிப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலைமையே நீடித்து வருகின்றது.
விசேடமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணியில் வேட்புமனு கிடைக்குமா என்பதில் தொடர்ச்சியாக முடிவில்லாத நிலைமை காணப்படுகின்றது.
நேற்றைய தினமும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலும் மஹிந்த ரா௪பக்ஷ தலைமையில் தனித்தனியாக முக்கிய சந்திப்புக்கள் இடம் பெற்றுள்ளன. எனினும் எந்தத் தரப்பிலும் இதுவரை எவ்விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் அனுரபிரியதர்ஷன யாப்பாவும், தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்தவும் நேற்றுக்காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதன் போது ஐ.ம. சு.வின் வேட்புமனுவை தயாரிப்பது குறித்தும் வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பாகவும் ஆழமான பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.
மஹிந்த ராஜபக்ஷ விவகாரம் தொடர்பாக இதன்போது பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையிலும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. மறுபுறம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்குமிடையிலான முக்கிய சந்திப்பும் நேற்றைய தினம் கொழும்பில் இடம் பெற்றுள்ளது.
இதன்போது இறுதிநேரத்தில் ஒருவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ராஜபக்ஷவுக்கு வேட்புமனு கிடைக்காவிடின் எவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பது என்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இரவும் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அந்த சந்திப்பிலும் சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம்ஜயந்த மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்சன யாப்பா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது வேட்பாளர் பட்டியலை தயாரிப்பது தொடர்பாக நீண்ட நேரம் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இணைத்து பாராளுமன்றத் தேர்தலில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அவை இதுவரை கைகூடாதநிலைமையாகவே காணப்படுகின்றது.
நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் சில மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களில் கைச்சாத்திடுவதற்கு வேட்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்த போதும் இறுதியில் அந்த நிகழ்வை ஜனாதிபதி இரத்து செய்துள்ளார்.
அதாவது மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் வேட்பு மனு வழங்கும் விவகாரத்தில் காணப்படுகின்ற இழுபறி நிலையே இந்த நிகழ்வு பிற்போடப்பட்டமைக்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மஹிந்தராஜபக்ஷ தனது முக்கிய ஆதரவாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கியுள்ளதாகவும், அந்தப் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள அனைவருக்கும் வேட்பு மனு வழங்கப்படவேண்டுமென்றும் அவர் கோரியுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது. எனினும் ஜனாதிபதி இந்த விடயத்தில் இதுவரை தீர்மானம் எடுக்காமல் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் குறித்த பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவருக்கும் ஐக்கிய மக்கள்சுதந்திர முன்னணியின் சார்பில் வேட்பு மனு வழங்கப்படவேண்டுமென்று மஹிந்தராஜபக்ஷ உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையிலேயே மைத்திரி மற்றும் மஹிந்த தரப்பினருக்கிடையில் தற்போதைய நிலைமையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும், தெரிகிறது. ஒரு வேளை மஹிந்தராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வேட்புமனு கிடைக்காவிடின் அவர் தனித்து களமிறங்குவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன குறிப்பிடுகையில்ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகும். அதனை யாராலும் தடுக்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமனம் பெற்று அவர் தலைமையில் புதிய ஆட்சி அமைக்கப்படுவதை எவரும் தடுக்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷ குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதும் உறுதியாகியுள்ளது.
சிலர் கூறுவது போல் இறுதி நேரத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்புமனுவை வழங்க மாட்டார் என்று தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. அவருக்கு நிச்சயம் ஐ.ம.சு.வில் வேட்புமனு கிடைத்தே தீரும். நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டே வருகின்றோம். சில விடயங்களில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குத் தவறமாட்டார் என உறுதியாக நம்புகின்றோம் என்றார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்கள் எதிர்வரும் திங்கட்கிழமை 13 ஆம் திகதி நண்பகலுடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.