இலங்கை மீதான சர்வதேச விசாரணை அறிக்கை தொடர்பில் புதிய நகர்வுகளை ரணில் தலைமையிலான அரசாங்கமே மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் புதிய அரசாங்கமே அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சுதந்தரக் கட்சியின் செயலாளருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். நாம் மீண்டும் ஆட்சியமைத்தால் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ளத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியினால் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை வெளிவருவது தொடர்பில் எமது ஆட்சியில் இருந்தே அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுவந்தன. ஆனால் நாம் எமது ஆட்சியில் சரியான முறையில் சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தோம். இவ்வருடம் மார்ச் மாதம் ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
எனினும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் நிலைமைகளும் சற்று மாற்றமடைந்துள்ளது. புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவின் தலைமை உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி மார்ச்சில் வெளிவர விருந்த விசாரணை அறிக்கையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையில் பிற் போட வலியுறுத்தி னார். அதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளிவிடவுள்ளது.
ஆனால் இந்த அறிக்கை தொடர்பில் முழுமையான தாக்கத்தையும் புதிய அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். சர்வதேச நாடுகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கே தெரியும். எவ்வாறான உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்புடன் எவ்வாறான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன என்பது எமக்குத் தெரியாது. ஆகவே இந்த அரசாங்கமே இவற்றை கையாள வேண்டும். ஆனால் இம்முறை பொதுத் தேர்தலுடன் நிச்சயமான ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படும். மீண்டும் எமது அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அவ்வாறான நிலைமையில் சர்வதேசம் மீண்டும் எமது அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க முயற்சிகளை எடுக்கும் என்பது எமக்கு தெரியும். ஆகவே இந் நிலையில் எந்த அழுத்தங்களுக்கும் நாம் முகம் கொடுக்க தயாராகவே உள்ளோம் என்றார்.