நல்லாட்சியை மஹிந்தவிடம் பணயம் வைக்கும் மைத்திரி !


mahinda-rajapaksa-and-maithripala-sirisena

 எப்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த பொது வேட்பாளர் எனும் பூதத்தினை மகிந்தவிற்கு எதிரான அணிகள் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் வெளிப்படுத்தியதோ அன்றிலிருந்து இன்று வரை இலங்கை அரசியல் அரங்கில் அரங்கேறும் நிகழ்வுகள் எதிர்வு கூற இயலாத வண்ணமே உள்ளன.முன்னாள் ஜனாதிபதி மகிந்தவியின் அரசியல் உள் வீட்டினுள் அரசியல் பால் அருந்திக் கொண்டிருந்த .மைத்திரி அணியினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவினது அரசியலினை சகிக்க முடியாது சரிக்க முடிவு செய்து மகிந்தவிற்கு எதிராக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கினர்.

 மகிந்தவினது அரசினை எந்தளவு விமர்சிக்க முடியுமோ அந்தளவு விமர்சித்து 61 இலட்சம் வாக்குகளினை தங்கள் வசப் படுத்தி வெற்றி வாகை சூடினர்.கடந்த தேர்தலில் மைத்திரி இற்கு வாக்களித்த 62  இலட்சம் மக்களும் மகிந்தவிற்கு எதிரான விமர்சனத்தினையும்,இவர்களின் துணிவினையும் நம்பித்தான் வாக்களித்தார்கள்.இவர்களினை நம்பிய சிறு பான்மை இன மக்கள் மகிந்தவினை முற்றாக நிராகரித்து மைத்திரியின் பின் அணி திரண்டார்கள்.பல இடங்களில் மகிந்த தனது தோல்விக்கு சிறு பான்மை இன மக்களினையே குறிப்பிட்டும் வருகின்றார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐ.ம.சு.கூவின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டி இட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிப்பால அனுமதி வழங்கியுள்ளதாக ஐ.ம.சு.கூவின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமா ஜெயந்த குறிப்பிட்டுள்ளார்.இதில் மிக முக்கியமான விடயம் மைத்திரியின் அனுமதி வெறும் வாய் வார்த்தைகள் மாத்திரமே.இதனையே ஐ.ம.சு.கூவின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமா ஜெயந்த தனது ஒப்பத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.

இவ் விடயத்தில் மகிந்த மைத்திரிக்கு மூன்று நிபந்தனைகளினை முன் வைத்துள்ளதாகவும் மைத்திரி மகிந்தைக்கு பத்து நிபந்தனைகளினை முன் வைத்துள்ளதாகவும் அறிய முடிகிறது.இவ் நிபந்தனைகள் இருவரிடையேயும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிய முடியவில்லை.நிச்சயமாக மகிந்த தனது நிபந்தனையில் தனக்கு பிரதமர்ப் பதவியினைத் தர வேண்டும் எனவும் மைத்திரி தனது நிபந்தனையில் மகிந்த பிரதமர் ஆகக் கூடாதென்றும் கூறி இருப்பார்கள்.மகிந்தவின் பிரதமர்க் கோரிக்கையினை தாங்கள் நிராகரித்துள்ளதாக அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ளமை இங்கே குறிப்பிடத் தக்கது.

 எனவே,இவ் இருவரினதும் நிபந்தனைகள் ஒரு உடன்பாட்டிற்கு வருமா என்பதும் இரு முறை ஜனாதியாக இருந்த ஒருவர் சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இருக்க விரும்புவாரா என்பதும் சந்தேகத்திட்கிடமானது. எனவே,மைத்திரி மகிந்தவிற்கு தற்போது வழங்கியுள்ள அனுமதியினை நிபந்தனைக்குட்பட்ட ஒரு அனுமதியாகவே பார்க்க முடிகிறது.மைத்திரியின் இறுதித் தீர்மானமாக இதனைப் பார்க்க முடியாது.நிலைமையினை நன்கு அவதானிக்கும் போது எப்போதும் இருவரிற்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றலாம்.மகிந்த அணியினர் மைத்திரி வேட்பு மனு தராவிட்டால் என்ன செய்வது எனவும் திட்டம் தீட்டியும் வைத்துள்ளாராம்.எது எவ்வாறு இருப்பினும் மைத்திரி மகிந்தவிற்கு வேட்பு மனுவினை வழங்க ஒப்புக் கொண்டுள்ளார் என்பது தெளிவாகிறது.

அமைச்சர் ராஜித சேனாரத்ன “மகிந்தவினை தற்போது வேட்பாளராக களமிறங்கவே அனுமதித்துள்ளோம்” என மகிந்தவினை ஐ.ம.சு.க சார்பாக  தேர்தலில் களமிறங்க ஒப்புதல் அளித்தது பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.எதிர்காலத்தில் பிரதமராக நியமிக்கப்படுபவர் ஒன்றும் நேரடியாக பிரதமரிற்கு களமிறங்குவதில்லை வேட்பாளராகவே ஒரு மாவட்டத்தில் களமிறங்குவார்.மகிந்தவிற்கு வேட்பு மனு வழங்கும் விடயத்தில் இவ் அரசு அமைதலின் முக்கிய சூத்திர தாரிகளாக கருதப்படுகின்ற தற்போதைய ஜனாதிபதி மைத்திரி,அமைச்சர் ராஜித சேனாரத்ன,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோர் மகிந்த ராஜ பக்ஸவிற்கு ஐ.ம.சு.கூவில் ஆசனம் வழங்கப்படாது என இறுதி வரை குறிப்பிட்டு வந்தனர்.எனவே,மகிந்த பிரதமர் ஆகுவாரோ இல்லையோ மைத்திரி மகிந்தவிற்கு ஆசனம் ஒப்புக் கொண்டமையானது  இவர்களின் இயலாமையினைத் தெளிவாகக் காட்டுகிறது.

 மகிந்தவிற்கு வேட்பு மனு வழங்கும் விடயத்தில்  தோல்விகண்டவர்கள் தேர்தலின் பிற் பாடு  பிரதமரினை நியமிப்பதில் மகிந்தவின் சானக்கியத்தின் முன் அடி பணிய மாட்டார்கள் என்பதனை எவ்வாறு நிச்சயிப்பது?

இச் செய்தியின் உண்மைத் தன்மையில் பல வித சந்தேகங்களும் கிளம்பியுள்ளன.இது சு.கவினை குழப்ப,மைத்திரியின் செல்வாக்கினை நலிவாக்க அரங்கேற்றப்படும் ஒரு நாடகாமா? என்ற வினாவும் எழாமல் இல்லை.இவ் விடயம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா “தனக்கு இது பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை ” எனக் குறிப்பிட்டுள்ளார்.மகிந்தவினை ஐ.ம.சு.கூ இல்  களமிறங்க மைத்திரி ஏற்றுக் கொண்டமைக்கான எதுவித ஆதாரமும் இல்லாத போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் இக் கூற்று இவ் வினாவிற்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைந்திருந்தது.

 மகிந்த ராஜ பக்ஸவிற்கு மைத்திரி ஆசனம் வழங்க அனுமதி அளித்துள்ளார் என்ற விடயம் இலங்கை அரசியல் அரங்கில் மிகப் பெரிய பேசு பொருளாக உருவெடுத்துள்ளது.மகிந்த சார்பு அணியினர் தாங்கள் மைத்திரியுடனான பிரதமர்ப் போராட்டத்தின் முதற் படியினை வெற்றி கொண்டு விட்டதாக இதனை வைத்து கூப்பாடு போடுகின்றனர்.ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் மைத்திரி மகிந்தவிற்கு ஆசனம் வழங்கினால் தான் அரசியலில் இருந்து வெளியேறுவேன் எனக் கூறியதற்கு அமைய தான் அரசியலில் இருந்து ஒதுங்க உத்தேசித்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 அமைச்சர் ராஜித மைத்திரியின்  அனுமதியினை உறுதிப்படுத்தியுள்ளார்.பல இடங்களில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி நேரடியாகவும்,மறைமுகமாகவும் தனது இச் செயற்பாட்டிற்கு நியாயம் கற்பித்தும் வருகின்றார்.இவ் விடயத்தினை பொய்யென நம்ப மறுத்த அர்ஜுன ரணதுங்க ஐ.தே.க பக்கம் தந்து அரசியல் வாகனத்தினைத் திருப்பியுள்ளார்.எனவே,இது ஒரு பொய்யான தகவலாக இருப்பதற்கான சாதகத் தன்மை அரிதிலும் அரிது என்றே கூறலாம். 

மகிந்த ராஜ பக்ஸவின் தேர்தல் களமிறங்குகை பற்றி அண்மையில் ஊடகவியளாரின் வினாவிற்கு பதில் அளித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா “இவரினை நாங்கள் கணக்கில் எடுப்பதில்லை” என பதில் அளித்திருந்தார்.இப்போது சு.க மகிந்தவிற்கு அனுமதி வழங்கியுள்ளமை இவர்களினது அரசியல் இயலாமையினையே காட்டுகிறது.தங்களது இயலாமையினை  பகிரங்கமாக ஒப்புக் கொள்ளாமல் இவ்வாறு  குறிப்பிட்டு ஊடகவியாரிடம் இருந்து தப்பிக் முயன்றிருக்கலாம்.அல்லாது போனால் ஆட்சி மாற்றத்திற்கு மிகப் பெரிய பங்களிப்பைச் செய்த சந்திரிக்காவிற்கும் மைத்திரி இற்கும் இடையில் தற்போது பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது என்பதனை விளங்கிக் கொள்ளலாம்.

இவ் ஆட்சி மாற்றத்திலும்,ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினைக் குறைப்பதிலும் மிகப் பாடுபட்டவருமான சோபித தேரர் இச் செய்தியினை இன்னும் நம்பாது இவ் விடயத்தில் மைத்திரியின் அறிக்கையினை எதிர் பார்த்து காத்துள்ளமை ஆட்சி மாற்றத்திற்கு காரணமானவர்களினைப் புறக்கணித்து மைத்திரி இவ் விடயத்தில் செயற்பட்டுள்ளார் என்பதற்கான ஒரு ஆதாரமாகக் கொள்ளலாம். இவ் விடயத்தில் ஆட்சி மாற்றத்தில் பங்காளிகளான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா,ஜாதிக ஹெல உறுமய கட்சி ,சு.கயில் உள்ள மைத்திரி சார்பு அணியினருடன் மைத்திரி கலந்துரையாடிய பின்னரே ஒரு முடிவு எடுத்திருக்க வேண்டும்.இவர்களினைப் புறக்கணித்து முடிவினை எடுத்துள்ளமை இவரினது அதிகாரப் பண்பினை சற்று எடுத்துக் காட்டுகிறது.

மைத்திரி வெற்றி வாகை சூடிய பிற் பாடு “எனது உயிர் மீதான ஆசையினைக் கை விட்டே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டி இட்டேன்” எனவும் “மகிந்த வென்று இருந்தால் தானும் தனது குடும்பத்தார் மட்டுமின்றி பல உயிர் இழப்புக்கள் ஏற்பட்டிருக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.அண்மையில் அமைச்சர் ஹக்கீமிற்கு தனது எதிர் வாதத்தினை முன்  வைத்த அமைச்சர் ராஜித தாங்கள் தங்கள் களுத்துக்களினை முன் வைத்து மகிந்த அரசிலிருந்து வெளியேறியதாக குறிப்பிட்டிருந்தார்.

 உண்மையில் இங்கே இவர்கள் கூற வரும் முக்கிய விடயம் “மகிந்த ராஜ பக்ஸவிற்கு ஆட்சி அதிகாரங்கள் செல்லும் இடத்து அவர் நிச்சயமாக தனது எதிரிகளினை பழி வாங்குவார்” எனும் செய்தியாகும்.அண்மையில் “நாங்கள் அதிகாரங்களினைக் கைப் பற்றிய பிறகு எங்கள் குழுவினர் பழி வாங்குவதனைத் தடுக்க முடியாது” என மகிந்த  கூறி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.மகிந்த ராஜ பக்ஸ வெற்றி பெற்று ஜனாதிபதியானால் இப்போது மைத்திரி இற்கு ஜனாதிபதிப் பதவியும்,சு.கவின் தலைமைப் பதவியும் உள்ளதால் அவரினை மகிந்தவினால் அசைக்க முடியாது.ஆனால்,இவரினை நம்பி எதிர்த்தவர்கள் நிலை என்ன ?  அதிலும் குறிப்பாக மகிந்த தனது தோல்விக்கு இவர்கள் தான் காரணம் எனக் கூறி அலையும் சிறு பான்மை இன மக்களின் நிலை என்ன?

மைத்திரியின் இச் செயற்பாடு இலங்கை அரசியல் அரங்கில் தனக்கென மைத்திரி தக்க வைத்து வந்த அனைத்து மரியாதைகளினையும் தவிடு பொடியாக்கியுள்ளது.இதன் காரணமாக சு.காவினைச் சேர்ந்த பலரும் மைத்திரி மீது அதிருப்தி கொண்டு வெளியேறலாம் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.இதன் முதற் படியாக சு.காவின் பொருளாளர் எஸ்.பி நாவின்ன ஐ.தே.கவில் இணைந்துள்ளார்.மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா சிறி கொத்தாவிற்கு சென்றுள்ளார்.அர்ஜுனாவும் மாறும் சாடை காட்டுகிறார்.இதன் பிற் பாடு இதன் காரணமாக இன்னும் பலரும் மாறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 தங்களது கட்சியான சு.கைவினைப் பாதுகாக்கவே தான் இம் முடிவினை எடுத்துள்ளதாக மைத்திரி கூறியுள்ள போதும் மைத்திரியின் இச் செயற்பாடு சு.காவினை ஓர் அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லப் போகிறது.மைத்திருக்கென்றும்,மகிந்தைக்கென்றும் சு.கவில் ஒரு சார்பு அணி உள்ளது.இதில் மைத்திரியின் ஆதரவு அணியில் உள்ளவர்கள் மகிந்தவினை எதிர்க்கவே மைத்திரியினைக் கரம் பிடித்துள்ளார்கள்.இவ் விடயத்தின் பிற்பாடு மைத்திரி சு.காவில் தனக்கு என வைத்திருந்த அணியினை இழப்பார்.மைத்திரி சு.காவில் மகிந்த அணியினை வைத்து எதனை சாதிக்கப் போகிறார்.எனவே,இத் தீர்மானத்தில் நிச்சயம் மைத்திரி தோல்வியினைத் தழுவுவார். 

மைத்திரியின் இத் தீர்மானத்தின் பிற் பாடு பலரும் தங்களது காட்டமான விமர்சனங்களினை முன் வைத்து இருப்பதால் மைத்திரி மகிந்தவினை இத் தேர்தலில் நேரடியாக எதிர்க்க வியூகம் வகுப்பார் என்று நம்பப்படுகிறது.ஐ.ம.சு.கூவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அதிகம் மகிந்தவினை ஆதரவளிப்பதால் ஐ.ம.சு.கூவில் மைத்திரியினால் எதுவும் செய்ய முடியாது.ஐ.ம.சு.கூவில் இருந்து சு.க பிரிந்து தேர்தலில் தனித்து கேட்பதே இதன் வியூகமாக இருக்கலாம்.

 இதற்கான முன்னெடுப்புக்களில் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா அதிக கவனம் செலுத்துவதாகவும் அறிய முடிகிறது.சில தகவல்களின் படி ரணில்,சந்திரிக்கா,பொன் சேகா,ஹெல உறுமய ஆகியன ஒன்றிணைந்து கேட்க திட்டம் தீட்டுவதாகவும் அறிய முடிகிறது.தங்களது வேட்பாளர்களினை கட்சிகள் வெல்ல வைக்க திட்டம் தீட்ட வேண்டிய தேவை உள்ளது.ஒரு மாவட்டத்தில் எத்தனை ஆசங்களினை ஒரு கட்சிக்கு ஒதுக்குவது போன்ற பல் வேறு பிரச்சினைகள் உள்ளதால் இன்னும் 10 நாட்கள் மாத்திரமே தெர்தலிற்கான வேட்பு மனுத் தாக்கல் செய்ய எஞ்சியுள்ள போது இத் திட்டம் சாத்தியமாகப் போவதில்லை.

எதிர் வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகப் பெரும் பான்மையினைப் பெறக் கூடிய சாத்தியக் கூறுகளே தற்போது தோற்றம் பெற்றுள்ளன.இது வரை காலமும் நலுவுற்றுக் காணப்பட்ட ஐ.தே.கவிற்கு தங்களது சின்னத்தினையும்,தனித்துவத்தினையும் வெளிக் கொணரக் கூடிய ஒரு சந்தர்ப்பம் தோன்றியுள்ள இச் சந்தர்ப்பத்தில் இன்னும் ஒரு கூட்டுக்குள் மறைந்து தங்களது பலத்தினை மூடி மறைக்க விரும்பவில்லை.தனித்து களமிறங்கி பெரும் பான்மையினைப் பெறும் போது அது ஐ.தே.கவிற்கு மிகப் பெரிய பலமாக அமையும்.அவ்வாறு அமையும்  பட்சத்தில் ஜனாதிபதி ஐ.தே.கவிற்கு  அடிய பணிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.கூட்டாக கேட்கும் போது ஐ.தே.கவின் வாக்கில் வேறு சிலரும் நலைந்து கொள்வார்கள்.

 கூடச் சேர்ந்தால் வெற்றி பெற்றாலும் வெற்றி பெறுவதற்கு முன்பு செய்யப்படுகிற ஒப்பந்தங்களே செல்வாக்குச் செலுத்தும்.கட்சி நலன் கொண்டு பார்க்கும் போது இத் தேர்தலில் தனித்து கேட்பது தான் ஐ.தே.க சிறந்த முடிவாக இருப்பினும் மகிந்த அணியிலிருந்து தாங்கள் பிரித்து எடுத்த  மைத்திரியின் எதிர்காலம் பற்றியும் சிறிது கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.ஆனால்,ஐ.தே.க மைத்திரியினை சிறிதும் கணக்கில் எடுக்கவில்லை.இவ் அணியில் செல்வதே வெற்றியினை சுவைப்பதற்கான சரியான பாதை எனக் கருதிய மலையகக் கட்சிகள்,சிறு பான்மை இனக் கட்சிகள் கட்சிகள் ஐ.தே.கவின் பக்கம் தங்கள் பாதையினைத் திருப்பியுள்ளன.மைத்திரி ஆட்சியின் பலமே ஐ.தே.கவும் ,சிறு பான்மை இன கட்சிகளுமே.இரண்டும் சென்றமை மைத்திரிக்கு பாரிய இழப்பாக அமைந்தது. 

இப்போது எங்கே மைத்திரி செல்வது? ஐ.ம.சு.கூ இல் மகிந்த அணிக்கே அதிக செல்வாக்கு உள்ளது.மகிந்தைக்கு அடி பணிவதனை விட வேறு வழி இல்லை.தனது கட்சியான சு.கயில் தனித்து போட்டி இடும் போது 10-15 பாராளுமன்ற உறுப்பினர்களிற்குள் மட்டுப்படுத்தப்படலாம்.இதை வைத்துக் மைத்திரியால் என்ன செய்ய இயலும்? இது இவரது ஜனாதிபதிப் பதவியினை நகைப்பிற்குட்படுத்தும்.ஆனால்,ஐ.ம.சு.கூ இல் மகிந்த ராஜ பக்சவினையும் இணைத்து செல்லும் போது மகிந்தவின் வாக்கில்,உறுப்பினர்களில் மைத்திரி தனது மானத்தினைக் காப்பாற்றிக் கொள்ளலாம் எனக் கணக்கு போட்டாலும் மைத்திரி அணியினர் மகிந்த அணியுடன் இணைந்து எந்த முகத்தினை வைத்துக் கொண்டு மக்களிடம் வாக்குக் கேட்கச் செல்வர்?

 எனவே,இவரின் இம் முடிவு சு.கவிலிருந்து ஐ.தே.கவிற்கான கட்சித் தவல்களினை அதிகரிக்கத் தான் செய்யப் போகிறது.எது எவ்வாறு இருப்பினும் மைத்திரியின் இத் தீர்மானத்திற்கு ஐ.தே.க,சிறு பான்மை இனக் கட்சிகளும் ஒரு காரணமாகும்.

எக் குற்றமெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை குற்றங்களினையும் புரிந்து ஆட்சி செய்த மகிந்த ராஜ பக்சவின் கையில் மீண்டும் ஆட்சி செல்வது மிகவும் ஆபத்தான ஒன்று.பிரதமர்ப் பதவியினை மகிந்தவிற்கு செல்லாமல் தடுக்க எத்தனை சாணக்கியத் திட்டங்களினை மைத்திரி  வகுத்தாலும் அது கத்தி மீது பயணிக்கும் ஒன்றாகவே அமையும்.தனது சுய நலம்,கட்சியினை பாதுகாக்க நாட்டு மக்களினை மைத்திரி பணயம் வைத்து செயற்படுகிறார்.இது சற்று அதிகமான நம்பிக்கை.இதனால் வரப் போகும் அனைத்து விளைவுகளிற்கும் மைத்திரியே மிகப் பெரிய குற்றவாளியாகவும் காணப்படுவார்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்