முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் அகில இலங்கை மக்கள் காங்கிரசில்???

DSC_0213_Fotor

எம்.வை.அமீர்

 தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்திகளை செய்து காட்டியவரும் சம்மாந்துறையை மையப்படுத்தி அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டவருமான முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் இன்னும் இரண்டொரு தினங்களில் அமைச்சர் றிசாத் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அக்கட்சியின் உயர் சபை உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.

தனது பலகலைக்கழக உபவேந்தர் காலப்பகுதியில் பொறியல் பீடத்தை நிறுவியவரும் அங்கு பிரமிக்கத்தக்க அபிவிருத்திகளை மேற்கொண்டவருமான  கலாநிதி இஸ்மாயில் நூற்றுக்கணக்கானோருக்கு நியமனங்களையும் வழங்கினார். தான் ஒரு அரசாங்க உத்தியோகத்தராக இருந்து கொண்டு சம்மாந்துறையிலும் ஏனைய பிரதேசங்களிலும் பள்ளிவாசகளை நிறுவியது முதல் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் செய்திருந்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம்முறை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கவுள்ளதால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து பல பிரபலங்களை தனது கட்சியில் இணைத்து வருகின்றது. அண்மையில் சாய்ந்தமருதைச் சேர்ந்த கல்முனையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபை தனது கட்சியில் இணைத்திருந்தது. அந்த வரிசையிலேயே சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் இன்னும் சில தினங்களில் இணைவார் என பலமாக நம்பப்படுகிறது.

சம்மாந்துறை பள்ளிவாசல் அமைப்புகள கூடசம்மாந்துறைக்கு எப்படியாவது பாராளமன்ற உறுப்பினர் ஒருவரை பெறும் நோக்கில் பல்வேறு முனைப்புகளை மேற்கொண்டு வரும் இவ்வேளையில் மக்கள் ஒருமைப்பட்டாலும் வேட்பாளர்களுக்கிடையே மோதல்கள் தவிர்க்க முடியாததாகி விடும்.

சம்மாந்துறையை பொறுத்தவரையில் போட்டியாளர்கள் இன்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்து காணப்பட்ட இவ்வேளையில் கலாநிதி இஸ்மாயில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து போட்டியிட்டால் பலத்த போட்டி நிறைந்த தொகுதியாக சம்மாந்துறை மாறும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது.

கலாநிதி இஸ்மையில் இணையும் நிகழ்வு ஒரு இப்தார் நிகழ்வாகவும் இருக்கலாம்.