முல்லை பெரியாறு அணை மீது தமிழீழ விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தகூடும் என கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்தது போல் விடுதலைப் புலிகள் மீது எந்தவித குற்றச்சாட்டையும் தமிழக அரசு சுமத்தவில்லை என்று நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை,
‘கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்தது போல் விடுதலைப் புலிகள் மீது எந்தவித குற்றச்சாட்டையும் தமிழக அரசு சுமத்தவில்லை.
எனினும், ஊடகங்களில் இது போன்ற செய்திகள் வந்தவுடன், முதலமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பில் என்னிடமும், அரசு உயரதிகாரிகளிடமும் விவாதித்தார். அப்போது மத்திய நுண்ணறிவு பிரிவின் ஆய்வு அறிக்கையின் நகலை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது என்பது முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்லப்பட்டது.
அந்த அறிக்கையில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு முல்லைப் பெரியாறு அணை மற்றும் முக்கிய நிர்மாணங்கள் ஆகியவற்றுக்கு லஷ்கர்–இ–தொய்பா, ஜெய்ஸ்– இ–முகமது நக்சலைட்டுகள் போன்ற அமைப்புகளால் உள்ள அச்சுறுத்தல்கள் பற்றி தெரிவித்துள்ளதோடு பத்தி 4.4ல் இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின் மீதமுள்ள உறுப்பினர்கள் ஒன்று திரள முயற்சித்துள்ளனர் என்றும் அவர்கள் இறுதிப் போரில் தமிழர்களுக்கு இந்தியா உதவி செய்யாததால், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், முக்கிய நிர்மாணங்களுக்கு இவர்களிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பாக எதுவும் இல்லை என்றாலும், தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இதிலும் கூட விடுதலைப் புலிகள் முல்லைப் பெரியாறு அணைக்கு சேதம் விளைவிப்பார்கள் என்று குறிப்பிட்டு மத்திய நுண்ணறிவுப் பிரிவு தெரிவிக்கவில்லை.
இருப்பினும், இது குறித்து தேவையற்ற விவாதமும், மன கசப்பும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உள்ள அம்மாவின் அரசின் மீது வீண் பழியும் சுமத்தப்படுவதால், தமிழக அரசு, ஒரு கூடுதல் மனுவினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அம்மா அறிவுறுத்தியுள்ளார்.
இந்த கூடுதல் மனுவில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு அச்சுறுத்தல் பற்றி அதனுடைய அறிக்கையில் பத்தி 4ல் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளில், 4.1 முதல் 4.3 மற்றும், 4.5 முதல் 4.8 வரையிலான மதிப்பீடுகள் மட்டும் தமிழக அரசுக்கு ஏற்புடையது என்றும், விடுதலைப் புலிகள் குறித்து பத்தி 4.4ல் மத்திய நுண்ணறிவுப் பிரிவின் குறிப்பை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்ற விவரத்தை இந்தக் கூடுதல் மனுவில் குறிப்பிட்டு தாக்கல் செய்யும்படி ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார். அவரின் அறிவுரையின்படி, உச்சநீதிமன்றத்தில் இதற்கான மனு உடனடியாக தாக்கல் செய்யப்படும்.
2009ஆம் ஆண்டு இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதற்கு கருணாநிதியின் செயல்கள் தான் காரணம் என்பதை ஜெயலலிதா பலமுறை எடுத்துச்சொல்லியுள்ளார்.
தனது உண்ணாவிரத நாடகத்துக்கு பின்னர், இலங்கை தமிழர்களுக்கெதிரான போரை இலங்கை அரசு நிறுத்திக் கொண்டது என்ற கருணாநிதியின் அறிவிப்பை நம்பி பதுங்கு குழிகளிலிருந்து வெளிவந்த தமிழர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டதை யாரும் மறந்திட முடியாது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக இலங்கையில் இறுதிப் போர் உச்ச கட்டத்தில் இருந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி இரவு 8 மணிக்கு புலிகள் இயக்கத்தின் திருகோணமலை பகுதி அரசியல் பிரிவு தலைவர் சசிதரன் சேட்டிலைட் தொலைபேசி மூலம் கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் தொடர்பு கொண்டு பேசினார் என்றும், அப்போது விடுதலைப் புலிகளை சரணடைந்து விடும்படியும், அவர்களது விடுதலைக்கு உத்தரவாதம் தருவதாக கனிமொழி பேசியதாகவும், அதை நம்பியே சசிதரனும் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளும், மே மாதம் 18ஆம் திகதி சரணடைந்தனர் என்றும் இலங்கை வடக்கு மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளாரே!
இந்தக் குற்றசாட்டுக்கான பதிலை கருணாநிதி முதலில் தெரிவிக்கட்டும். அதை விடுத்து கற்பனையான குற்றசாட்டுகளை தமிழக அரசு மீது தெரிவிக்க வேண்டாம் என கருணாநிதியை கேட்டுக்கொள்கிறேன்’. என ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் கூறியுள்ளதாக இந்திய செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.