முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் இருந்து போட்டியிடலாம் என தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கம்பஹா மாவட்டம் ஊடாக களமிறங்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ரஜபக்ஷ இது தொடர்பில் எவ்வித உத்தியோக அறிவிப்புக்களையும் விடுத்திராத போதும்,பெரும்பாலும் அவர் அரசியலுக்கு வரக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவ்வாறு அவர் வருகை தரும்பட்சத்தில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ராஜபக்ஷ குடும்பத்தின் மற்றொரு பிரதான நபராக கருதப்படும் கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக் ஷ இம்முறை தேர்தலில் போட்டியிட மாட்டார் எனவும் அவருக்கு தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு வரும் வகையில் இணக்கப் பாடொன்று எட்டப்பட்டுள்ளதாகவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குருணாகல், இரத்தினபுரி மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ஒன்றில் போட்டியிடவுள்ளதாக அவரது ஆதரவு தரப்பினர் முன்னதாக தெரிவித்தனர். இந் நிலையில் மஹிந்த ராஜபக் ஷ குருணாகலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் 90 வீதம் இருப்பதாகவும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடாகிவிட்டதாகவும் முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இந் நிலையிலேயே மஹிந்த ராஜபக்ஷ குருணாகலில் தேர்தலில் களமிறங்கினால் கோத்தபாய ராஜபக் ஷ கம்பஹா மாவட்டம் ஊடாக களமிறங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மஹிந்த ஆதரவு தரப்பினர் அவர் குருணாகலில் போட்டியிடுவார் எனக் கூறினாலும் நேற்று மாலை வரை அதனை மஹிந்த ராஜபக் ஷவோ அல்லது கட்சியின் பொதுச் செயலாளரோ உறுதி செய்யவில்லை.
எவ்வாறாயினும் மஹிந்தவுக்கு நெருங்கிய தகவல்களின் பிரகாரம், இம்முறை மஹிந்த ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதினிதித்துவம் செய்து தேர்தலில் களமிறங்க மாட்டார் என தெரிகின்றது.தனது மகன் நாமல் ராஜபக் ஷவுக்கு அம்மாவட்டத்தில் இடம் வழங்கல் உள்ளிட்ட பல காரணங்களை மையப்படுத்தியே அவர் அங்கு போட்டியிடாது வேறு ஒரு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக அந்த தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷவின் மீது சுமத்தப்பட்டுள்ள நிதிமோசடி குற்றச்சாட்டுகள், கடந்த ஜனாதிபதித் தேர்தல் தோல்வி மற்றும் தோல்வியை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறியமை உள்ளிட்டவை காரணமாக அவர், இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றும் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு வருவார் என்றும் தெரியவருகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம்ஜயந்தவுக்கும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷவுக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக கூறப்படும் சந்திப்பின்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் வேட்புமனு வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மேர்வின் சில்வா, துமிந்த சில்வா, சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோருக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் வேட்புமனு வழங்கப்படமாட்டாது என கட்சியின் உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.