நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் அரசியல் நகர்வுகள் விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கும் போது பலவிதமாக செயற்பட்டுள்ளனர். இதன்பிரகாரம் கட்சியினதும் நாட்டின் வளர்ச்சியையும் கருத்திற் கொண்டு தீரமானங்கள் எடுக்கும் போது உறுதியாக நின்று செயற்படுவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நான் நாட்டின் ஜனாதிபதியாகுவேன் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டேன். எனினும் என்னை எதிரணியின் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு விதை விதைத்தவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கவாகும். மேலும் ஊழல் தவிர பண்டாரநாயக்கவினர் நாட்டிற்கு செய்யாத சேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்கவின் 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற விசேட நிகழ்வின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
இந்தியாவில் காந்தி குடும்பத்திற்கும் பண்டாரநாயக்க குடும்பத்திற்கும் இடையில் பாரிய உறவு முறை காணப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு தேசபிதா டி.எஸ் சேனாநாயக்க பாரியளவிலான சேவைகளை செய்திருக்கின்றார். இதன்பிரகாரம் நாட்டில் விவசாயத்துறையை கட்டியெழுப்புவதற்கு அவர் செய்த சேவை அளப்பரியது.
பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றுக் கொடுப்பதற்கு டி.எஸ் சேனாநாயக்கவை போன்று எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்க, பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோரும் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்று கொடுத்தனர். ஆகவே பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றுக் கொடுக்கும் விடயத்தில் காந்தி குடும்பத்திற்கும் பண்டாரநாயக்க குடும்பத்திற்கும் பாரியளவில் தொடர்பு காணப்படுகின்றது.
1956 ஆம் ஆண்டு அரசாங்கம் உருவாக்கிய பண்டாநாயக்க நாட்டை குறுகிய காலங்களுக்கே ஆட்சிப்புரிந்தார். இருந்த போதிலும் இன்று வரை நாட்டு மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
எனவே இலங்கை ஆட்சிசெய்த தலைவர்கள் கட்சியின் நகர்வுகள் குறித்தும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் தீர்மானம் எடுக்கும் போது பலவிதமாக செயற்பட்டுள்ளனர். ஜே.ஆர் ஜெயவர்தன இந்திய இலங்கை ஒப்பந்ததிற்கு தனது அமைச்சரவையில் மாத்திரமின்றி முழு நாடுமே எதிராக செயற்பட்ட போது போரட்டக்காரர்களின் தடையையும் தாண்டி தான் நினைத்ததை செய்து முடித்தார்.
அது போலவே முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட போது அதிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு பல்வேறு தீர்மானங்களை எடுத்துக்கொண்டார்.
அதேபோன்று சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது ஆட்சியின் போது தீர்மாங்கள் எடுக்கும் போது அனைவரினதும் ஆலோசனைகளுக்கும் செவிமடுத்து தீர்மானங்களை எடுப்பார்.
நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் அரசியல் நகர்வுகள் விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கும் போது பலவிதமாக செயற்பட்டுள்ளனர். இதன்பிரகாரம் கட்சியினதும் நாட்டின் வளர்ச்சியையும் கருத்திற் கொண்டு தீரமானங்கள் எடுக்கும் உறுதியாக நின்று செயற்படுவேன்.
இந்நிலையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது எதிரணியின் பொது வேட்பாளராக நான் களமிறங்குவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. எனினும் சந்திரிக்கா அம்மையார் எனக்கு தொலைப்பேசியில் அழைப்பு விடுத்தபோது நான் வேட்பாளராக போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது மக்கள் விடுதலை முன்னணியோ ஆதரவு நல்கும் என்று கூட நான் நினைக்கவில்லை.
எனினும் நான் கனவிலும் நினைக்காத அளவிற்கு நான் ஜனாதிபதி பீடமேறினேன். பொதுவேட்பாளராக நான் களமிறங்குவதற்கு பிரதான விதை விதைத்தவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கவாகும் என்றார்.