முஸ்லிம் கலாசார அமைச்சின் இணைப்பாளராக அஸ்வான் மௌலானா நியமனம்!

Aswan_Fotor
ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரசார இணைப்புச் செயலாளர் செயிட் அஸ்வான் சக்காப் மௌலானா, முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் சிபார்சின் பேரில் முஸ்லிம் சமய, கலாசார அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீம் இந்நியமனத்தை வழங்கியுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை தனது கண்டி அலுவலகத்தில் வைத்து இவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் கையளித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்ட கால செயற்பாட்டாளரான இவர் கடந்த 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்டிருந்தார்.
சிறந்த கலைஞரும் சமூக சேவையாளருமான இவர் மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவராக பணியாற்றி வருவதுடன் மற்றும் பல பொது அமைப்புகளிலும் அங்கம் வகித்து சேவையாற்றி வருகின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மருதமுனை மத்திய குழுத் தலைவராகவும் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட கொள்கை பரப்பு செயலாளராகவும் பணியாற்றிய மர்ஹூம் கலைச்சுடர் சக்காப் இசற்.மௌலானாவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.