எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டதாக உயர் கல்வி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எனினும் சமல் ராஜபக்ஷ அரசியலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி இரு பிரிவாக உள்ளதே தவிர இரண்டாக பிளவுப்படவில்லை. இந்நிலையில் மாத்தியஸ்தம் வகிக்கும் பிரிவினரால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
எனினும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினுள் மாற்று கருத்துக்களை கொண்டவர்கள் இருப்பதால் பல கலந்துரையாடல்களின் பின் யாரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தவது என இறுதி முடிவு எடுக்கப்படும்.