(அஸ்லம் எஸ்.மௌலானா)
சந்திரிகா அரசாங்கத்தில் பலம் வாய்ந்த அமைச்சராகத் திகழ்ந்த எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதில் தீவிரமாக செயற்பட்ட ஒருவரே ராஜித சேனாரத்னவாவார். இன்று அவர் எமது கட்சியின் தற்போதைய தலைவரான ரவூப் ஹக்கீமை வேண்டத்தகாத வார்த்தைகளினால் விமர்சித்துள்ளார்.
இவ்வாறு கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு திங்கட்கிழமை இடம்பெற்ற போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட விமர்சனக் கருத்துத் தொடர்பில் மாநகர சபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் கண்டன அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றினார்.
இவ்விடயம் தொடர்பில் முடிவுரை நிகழ்த்துகையிலேயே முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது;
“பதவிக்காக காலத்திற்கு காலம் கட்சி விட்டு கட்சி மாறுகின்ற அமைச்சர் ராஜித, எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்களை பதவிக்காக மதத்தைக் கூட மாற்றிக் கொள்வார் என்று கூறியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரிய கூற்றாகும். இது ஒட்டு முஸ்லிம்களையும் அவமானப்படுத்துகின்ற ஒரு விசமனத்தனமான கருத்தாகும்.
அமைச்சர் ராஜித, தான் எங்கு இருக்கிறார் என்பது கூட தெரியாமல் தடுமாறுகின்ற ஒரு மட்டரகமான அரசியல்வாதியாவார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பற்றி விமர்சிப்பதற்கு அவருக்கு எந்த அருகதையும் கிடையாது. அதற்கு அவர் தகுதியற்றவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் பலம் குறித்து ராஜித அச்சப்படுவதையே அவரது கருத்து சுட்டிக்காட்டுகின்றது. சிலவேளை ஹக்கீம் பிரதமராகி விடுவாரோ என்று அவர் பயப்படுகிறார் போல் தெரிகிறது.
முஸ்லிம் தலைமைகளை எப்போதும் இனவாதக் கண்ணோட்டத்துடன் நோக்குவதையே அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.அதனால் தான் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதில் அவர் மிகவும் தீவிரமாக முன்னிலை வகித்திருந்தார்.
பதவிகளுக்காக மதம் மாறிய வரலாறு முஸ்லிம்களிடம் கிடையாது. அது மாற்று சமூகத்தினரிடம் காணப்பட்டுள்ளது. கிறிஸ்தவ பரம்பரையில் வந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக் க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, மஹிந்த ராஜபக்ஷ போன்றோரின் குடும்பங்கள் அதிகாரப் பதவிகளுக்காக பௌத்த மத்தத்திற்கு மாறியிருந்தனர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட முடியும்” என்று முதல்வர் குறிப்பிட்டார்.
பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் கண்டன அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் கூறியதாவது;
“அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றது. அதனால் அமைச்சர் ராஜித மீது முஸ்லிம்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்துள்ளது. அதாவது ஜனாதிபதிப் பதவி கிடைக்குமென்றிருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தனது மதத்தையும் மாற்றிக் கொள்வார் என்று ராஜித தெரிவித்த கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்க விடயமாகும்.
20 ஆவது திருத்தத்தை கொண்டுவர வேண்டுமென்பதற்காக முன்மொழியப்பட்ட பிரேரணைகள் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அவருடைய தலைமையில் சிறுபான்மைக் கட்சிகளும் மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டன. இரு பிரதான கட்சிகளும் அவர்களுடைய அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கான ஒரு முன்மொழிவாகவே 20 ஆவது திருத்தமிருக்கின்றது என சிறுபான்மைக் கட்சிகள் சுட்டிக்காட்டின.
1972 ஆம் ஆண்டு சிறீமாவோ ஆர்.டி.பண்டாரநாயக்க முதலாவது குடியரசு சாசனத்தை கொண்டு வந்தபோது அப்போதிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் அதனை எதிர்த்தனர். அத்துடன் அந்த நகலை தீயிட்டும் கொளுத்தினர்.சிறுபான்மைச் சமூகத்திற்கு இருக்கும் ஒரேயொரு காப்புடமையான செனட் சபையை ஒழிக்கும் 29ஆவது சரத்தின் “ஏ” பிரிவு ஏன் நீக்கப்பட்டதுடன் அது போன்று சிறுபான்மை சமூகத்தின் உரிமையை இல்லாமல் செய்யும் சரத்துகளிருக்கின்றன என்பதற்காக தமிழ்த் தலைவர்கள் அன்று போராடினார்கள். அதற்காக அண்ணன் அமிர்தலிங்கம் அன்று சிறையிலடைக்கப்பட்டார்.
பின்னர் 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டு வந்த அரசியல் யாப்பு கூட சிறுபான்மை சமூகங்களைப் பல விடயங்களில் பாதிக்கின்றது என்ற குரல்களும் எதிர்ப்புகளும் எழுந்தன. அது போன்றுதான் தற்போது 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.சிறுபான்மை சமூகங்களுக்கு மிகவும் பாதிப்பான இத்திருத்த சட்ட மூலத்தில் சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகளை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பதற்காக அமைச்சர் ஹக்கீம் சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தையும் அணி திரட்டிப் போராடினார்.
சிறுபான்மையினருக்கு எது நடந்தாலும் பரவாயில்லை தேர்தல் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றவர்களுக்கு அமைச்சர் ஹக்கீமின் செயற்பாடுகள் பெரும் தலையிடியைக் கொடுத்தது. இதனால் தான் மிக மோசமான கருத்தை அமைச்சர் ராஜித முன்வைத்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 15 வருடங்களாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமை தாங்கிக் கொண்டிருக்கின்றார். பல தடவைகள் சமூகத்திற்காக அமைச்சர் பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு வந்துள்ளார். அமைச்சர் பதவிக்காக ராஜித போன்று அங்குமிங்கும் அலைந்து ஆல வட்டம் போடும் ஒரு தலைவரல்ல முஸ்லிம் காங்கிரஸின் தலைவரென்பதை இத்தகையவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள் தமது உயிரை விடவும் தமது சமயத்தை மேலாக மதிப்பவர்கள். அதற்காக போராடி மடியக் கூடியவர்கள். முஸ்லிம் சமுதாயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் காட்டிக் கொடுக்கும் கருத்துக்களைத் தெரிவித்த சல்மான் ருஷ்தியையும் தஸ்லீமா நஸ் ரீனையும் சமுதாயத்திலிருந்து தூக்கியெறிந்தது எமது முஸ்லிம் சமுதாயம் என்பதிப் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தில் ஒரு சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி பதவி பட்டம் பணத்திற்காகச் சமயத்தைத் துறக்க மாட்டான். இலங்கை வரலாற்றில் அப்படி எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டுமென்பதற்காக எவர் மதம் மாறினார்களென்பதை வரலாற்றைப் புரட்டிப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே முஸ்லிம் சமூகத்தை அவமதித்துள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர முன்வர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் உரையாற்றுகையில்;
“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பற்றியே அமைச்சர் ராஜித சேனாரத்ன விமர்சித்திருந்தார். அவரது கருத்து ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகத்தையும் இஸ்லாம் மார்க்கத்தையும் அவமதித்து விட்டது என்று எவரும் சிண்டுமுடிக்கத் தேவையில்லை. ஒரு அமைச்சர் இன்னொரு அமைச்சரையே குற்றம் சுமத்தியுள்ளார். அது நமது சமூகம் மற்றும் மார்க்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி விட்டது என்று மு.கா. உறுப்பினர்கள் கூறுவது வேடிக்கையானது.
பேருவளை, அளுத்கம பிரச்சினைகளின்போது பொது பல சேனாவை பகிரங்கமாக கண்டித்து, முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த ஒரு சிங்கள அரசியல் தலைமையே அமைச்சர் ராஜித என்பதை எவரும் மறந்து விடக்கூடாது. தனிப்பட்ட அரசியல் ரீதியான மோதல்களை சமூகப் பிரச்சினைகளாக ஊதிப் பெருப்பிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ.எம்.றக்கீப், ஏ.ஏ.பஷீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ் ஆகியோரும் இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் ராஜிதவைக் கண்டித்து உரையாற்றினர்.