எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் சம்மாந்துறையில் யார் எக் கட்சியில்..??

 

 

92595436_Fotor 

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

 40 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்கப்பட்டு வந்த சம்மாந்துறை ஊரின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை சம்மாந்துறை மக்கள் கடந்த ஒரு தசாப்த காலமாக இழந்து தவிக்கின்றனர்.இம்முறை சம்மாந்துறை மக்கள் தாங்கள் இழந்துவிட்ட அரசியல் தனித்துவத்தினைப் பாதுகாக்க எப்பாடுபட்டாவது ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை எடுக்க வேண்டும் என்ற உள உறுதியுடன் உள்ளனர்.எனினும்,சம்மாந்துறை மக்களின் இக் கனவு கனவாகவே களைந்து போய் விடுமா என்ற அச்சம் சம்மாந்துறை மக்களிடையே நிலவி வருகிறது.

சம்மாந்துறை ஊரானது ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினைப் பெறுவதற்கான போதியளவு வாக்குப் பலத்தினை தன்னகத்தே கொண்டுள்ள போதும் ஒற்றுமை இன்மை,தகுதியான வேட்பாளரினை கட்சிகள் களமிறக்காமை,சிறந்த வழி காட்டலின்மை போன்ற காரணிகளே பிரதிநிதித்துவ இழப்பிற்கான பிரதான காரணிகளாக மக்களினால் இனம் காணப்பட்டுள்ளது.இம்முறை பல நபர்களினது பாராளுமன்ற களமிறங்குகை சம்மாந்துறை மக்கள் வாக்களினை மையப் படுத்தி அமைய இருப்பதால் இம் முறை சம்மாந்துறை மண்ணானது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை இழக்குமாக இருந்தால் அவ் இழப்பிற்கான மிகப் பிரதான காரணியாக இதுவே இருக்கும் என பலரினாலும் நம்பப்படுகிறது.

10 இற்கு மேற்பட்டவர்கள் சம்மாந்துறை சார்பாக போட்டி இடும் எண்ணம் கொண்டிருப்பினும் இம்முறை ஐ.தே.கவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதால் ஐ.தே.க சார்பாகவே பலரும் களமிறங்கும் எண்ணத்தில் தங்களது காய் நகர்த்தல்களினை கச்சிதமாய் மேற்கொண்டு வருகின்றனர்.அண்மைக் காலமாக சு.க இற்கு முட்டுக் கொடுத்து கொண்டிருந்த கலைக்கப்பட்ட பிரதேச சபையின் தவிசாளர் நௌசாத் அவர்கள் தற்போது அசாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணியின் பக்கம் தனது அரசியல் பாதையினைத் திருப்பியுள்ளார்.

 இவரின் திரும்பலிற்கு பல சமூக சிந்தனை ரீதியான நியாயங்கள் கற்பிக்கப்படுகின்ற போதும் மிக உறுதியாக அரசியலிற்கான காய் நகர்த்தலாக இதனைக் குறிப்பிடலாம்.இம்முறை ஐ.தே.க நேரடியாக சம்மாந்துறையில் ஒரு நபரினை தேர்தலில் களமிறக்குமாக இருந்தால் சம்மாந்துறையில் ஐ.தே.க நோய் பிடித்து அசைய இயலாத போது  ஐ.தே.க இனை தூக்கி தோளில் சுமந்து சுகமாக்க பாடு பட்ட  ஹசன் அலிக்கே வழங்க வேண்டும்.இவரினைப் புறக்கணிப்பது நியாயமும் அல்ல.இவரிற்கே வழங்கப்படும் என ஐ.தே.க உள் வட்டாரத் தகவல்களும் குறிப்பிடுகின்றன.

இம்முறை அம்பாறை மாவட்டத்தினைப் பொறுத்த மட்டில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் ஐ.தே.கவின் நிழல் தேடி வரக் கூடிய ஒரு சாதகமான சூழ் நிலை உருவாகி இருப்பதால் ஐ.தே.க நேரடியாக தனது வேட்பாளர்களினை அதிகம் களமிறக்கி தங்களது நேரத்தினை வீண் விரயம் செய்யாது முஸ்லிம் காட்சிகளிற்கு ஆசனங்களினைப் பிரித்து கொடுத்து வாக்கெடுக்கும் ஒரு முறையினை கையாள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனடிப்படையில் அசாத் சாலியினது தே.ஐ.மு இற்கு ஒரு ஆசனத்தினை வழங்க ஐ.தே.க உயர்பீடம் முடிவு எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.இச் சீட்டினைக் குறி வைத்தே முன்னாள் தவிசாளர் நௌசாத் அவர்கள் அசாத் சாலி பக்கம் தனது பாதையினைத் திருப்பியுள்ளதாக குறிப்பிடலாம்.

எனினும்,நௌசாத் எத்தனை முயற்சி செய்தாலும்,தான் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும்  தன் ஊரினைத் தாண்டி அவரினால் வாக்குகளினை எடுக்க முடியாத காரணத்தினால் அம்பாறை மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் குறித்த செல்வாக்கினைக் கொண்டுள்ள மு.காவிற்கு ஈடு கொடுத்து தன்னால் போட்டி இட்டு வெற்றி பெறுவது கடினம் என்பதனை பல தடவை பட்டுத் தேறியவர் என்ற அடிப்படையில் முன்னாள் தவிசாளர் நன்கே அறிவார்.

 முஸ்லிம் காங்கிரஸானது ஐ.தே.க உடன் இணைந்து கேட்கும் பட்சத்தில்  தான் தேர்தல் கேட்பது இல்லை எனவும்,தனித்து கேட்டால் தேர்தல் கேட்கும் மனோ நிலையில் முன்னாள் தவிசாளர் நௌசாத் அவர்கள் சற்று உள்ளதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது.தற்போதுள்ள அரசியல் வாதிகளின் மீது நம்பிக்கை இழந்துள்ள சம்மாந்துறை மக்களிடையே ஒரு புதிய நபருடைய வருகை ஒரு புத்துணர்வினை ஏற்படுத்தக் கூடிய நிலைமை உள்ளதால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கோடு ஹசன் அலி குழுவினரும்,நௌசாத் குழுவினரும் இணைந்து ஒரு புது முகத்தினை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அவருடைய பெயர் ஐ.தே.க வேட்பாளர் பட்டியலிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் கதைகள் கசிய ஆரம்பித்துள்ளன.இருப்பினும்,அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கவில்  நேரடியாக களமிறங்க முஸ்லிம்களிற்கு ஒதுக்கக்கப்பட்டுள்ள இரண்டு ஆசனங்களில் ஹசன் அலியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் குறிப்பிடுகின்றன.முஸ்லிம்களின் ஏகோபித்த ஆதரவினைக் கொண்ட மு.கா,அ.இ.ம.கா ஆகிய இரண்டும் தங்களுக்கென ஐ.தே.க ஒத்துக்கியுள்ள ஆசனங்களில் தலா ஒவ்வொன்று வீதம் அதிகம் கேட்டுள்ளதால் ஐ.தி.கவில் நேரடியாக களமிறக்க முடிவு செய்துள்ள இரண்டு ஆசனங்களிற்கும சவால் ஏற்பட்டுள்ளமையும் இங்கே குறிப்பிடத் தக்கது.

மு.கா சார்பாக சம்மாந்துறையில் தேர்தல் கேட்கும் எண்ணத்தில் கிழக்கு மாகாண அமைச்சர் மன்சூர்,சட்டத்தரணி முஸ்தபா,மாஹிர் ஆகிய நபர்களினை சுட்டிக் காட்டலாம்.இதில் சட்டத்தரணி முஸ்தபா அவர்கள் சு.க,அசாத் சாலி போன்றோர் பக்கம் தனது முகத்தினை திருப்பி தேர்தலில் போட்டி இட வாய்ப்பு கேட்டதாக இவரின் மீது மு.கா தலைமை சற்று அதிருப்தி கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.அடுத்த படியில் உள்ள இருவரிடையே மாகாண அமைச்சர் மன்சூர் அவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்குவதாக இருந்தால் தனது மாகாண சபை உறுப்பினர் பதவியினை தான் முற்றாக இராஜினாமா செய்து மாஹிர் அவர்களிற்கு வழங்க வேண்டும்  அல்லாது போனால் தனக்கே இம் முறை போட்டி இடுவதற்கான சந்தர்ப்பத்தினை அமைச்சர் மன்சூர் விட்டுக் கொடுக்க வேண்டும் என மாஹிர் அணி வலுயுறுத்தி வருகிறது.இக் கோரிக்கை எந்தளவு நடைமுறைச் சாத்தியமானது? கிழக்கு மாகாண அட்சி எத்தனை நாள் நிலைக்கும் எனச் சிந்தனை செய்தால்  இம்முறை கிழக்கு மாகாண சபை அமைச்சர் மன்சூர் அவர்களே தேர்தல் கேட்பார் எனக் கூறலாம்.

சம்மாந்துறை சார்பாக அ.இ.மகா இல் முன்னாள் தென் கிழக்கு பல் கலைக் கழக உபவேந்தர் இஸ்மாயில்,CIMS கல்லூரிப் பணிப்பாளர் அன்வர் முஸ்தபா  ஆகிய இருவரில் ஒருவர் தேர்தல் கேட்பார் என நம்பப்படுகிறது.முன்னாள் தென் கிழக்கு பல் கலைக் கழக உபவேந்தரினை அ.இ.ம.கா கட்சிக்குள் உள் வாங்க சில குழுக்களும் உள் வாங்கக் கூடாது என சில குழுக்களும் தங்களாலான முயற்சிகளில் ஈடு பட்டு வருகின்றனர்.இது வரையில் முன்னாள் தென் கிழக்கு பல் கலைக் கழக உபவேந்தர் அ.இ.ம.க உடன் உத்தியோக பூர்வமாக இணையவில்லை.இவருடைய வருகையினை எதிர் பார்த்தே அ.இ.ம.க சம்மாந்துறை மத்திய  குழுவினைக்  கூட நியமிக்காது காத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மாளிகைக்காட்டினை பிறப்பிடமாகக் கொண்ட அன்வர் முஸ்தபா அவர்கள் தேர்தலில் தான் அ.இ.ம.காவில் கேட்க உள்ளதாக குறிப்பிட்டாலும் அ.இ.ம.கா இன் தலைவர் றிஸாத் பதியூர்தீனிடம் இவரினை களமிறக்கும் எண்ணம் இது வரை இல்லை என அறிய முடிகிறது.முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் அவர்கள் சு.க இல் களமிறங்க தனது சில எட்டுக்களினை வைப்பதாகும் சில நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது.

சம்மாந்துறை மக்கள் தற்போதுள்ள அரசியல் வாதிகளின் மீது சலிப்புற்றுள்ளமையினை மக்களிடையே நன்கு உள் நுழைந்து ஆராயும் போது அறிய முடிகிறது.சம்மாந்துறை ஊரில் பிறந்து,வளர்ந்து திருமணம் செய்து,நன்கு படித்து,சமூக சேவையில் ஆர்வம் உள்ள ஒருவரினை இத் தேர்தலில் எவ் அணி களமிறக்குமோ  அவ் அணி மிகப் பெரிய அருவடையினைப் பெற்றுக் கொள்ளும்.