முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக்காவிடின் கட்சியில் இருந்து முன்னாள் எம்.பி.க்கள் பலர் வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
மஹிந்தவை விட்டுக்கொடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் கடும் சிக்கல் நிலைமை ஏற்பட்டிருக்கும் நிலையில் கட்சியின் தீர்மானம் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க நாம் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகின்றோம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பலமான கட்சியாக ஒன்றிணைத்து மீண்டும் ஜனநாயக ஆட்சியை கட்டியெழுப்ப நாம் போராடி வருகின்றோம்.
ஆனால் கட்சியில் ஒரு சிலர் தமது தனிப்பட பழிவாங்கலை மட்டுமே செய்து வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை ஆட்சியில் இருந்து வீழ்த்தியதும் இன்றும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிப்பதும் குறிப்பிட்ட ஒரு சிலரேயாகும்.
அவர்களுக்காக கட்சியை சீரழிக்க அனுமதிக்கக்கூடாது. இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தகுதியான ஒருவரை பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டும். இந்த விடயத்தை தொடர்ச்சியாக நாம் ஜனாதிபதியிடமும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களிடமும் தெரிவித்து வந்துள்ளோம். ஆகவே இப்போது ஜனாதிபதி சரியான முடிவினை எடுக்க வேண்டும் .
மேலும் ஜனாதிபதி நியமித்துள்ள ஆறு பேர் கொண்ட குழுவும் எமது அறிக்கையில் மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்பதையே பரிந்துரைத்துளளது. எமது அறிக்கையானது கட்சியின் அனைத்து உறுப்பினர்களினதும் விருப்பதுக்கமையவே தயாரிக்கப்பட்டுள்ளது.
எனவே கட்சியின் ஒட்டுமொத்த தீர்மானத்தையும் ஜனாதிபதி கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்தி மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் பலமான ஆட்சியை உருவாக்குவதே எமது ஒரே எதிர்பார்ப்பாகும்.
நாட்டில் மோசமான சம்பவங்கள் இந்த சில மாதங்களில் நடந்தேறியுள்ளன. வடக்கில் மிகவும் மோசமான சம்பவங்களுக்கு மக்கள் முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. நாட்டின் தேசியப் பாதுகாப்பில் மீண்டும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே இவை அனைத்தையும் மீண்டும் சரிசெய்ய வேண்டும்.
எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மஹிந்தவை களமிறக்க வேண்டும். இல்லையேல் ஐக்கிய மாக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் எம்.பி.க்கள் 100 பேர் கட்சியில் இருந்து விலகி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கூட்டணியில் இணைய தீர்மானித்துள்ளோம். கட்சியை ஒன்றிணைப்பது முக்கியமானதே. ஆனால் அதை விடவும் நாட்டை பாதுகாப்பது மிக முக்கியமானதாகும். எனவே மஹிந்தவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவந்து நாட்டை கட்டியெழுப்ப நாம் தயாராக உள்ளோம். கட்சியில் இணக்கப்பாடு எட்டப்படாவிடின் மாற்று முடிவுகளை எடுக்க வேண்டிவரும் எனவும் அவர் குறிபிட்டார்.