தமது சொந்த ஊரான மெதமுலன்னையில் வைத்து இன்று முற்பகல் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
பொதுமக்களின் கோரிக்கையை நிராகரிப்பதற்கு தமக்கு உரிமையில்லை என்ற அடிப்படையிலேயே இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே அங்கு பௌத்த நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் கொழும்பில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையிலான வாகன பேரணி சென்றடைந்த பின்னர் இந்த அறிவிப்பை மஹிந்த ராஜபக்ச விடுத்தார்.
எனினும் நேற்று தமக்கு இடம்தருவதாக கூறப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலா? அல்லது வேறு கட்சியிலா? இணைந்து போட்டியிடப்போகிறார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.
ஐக்கிய தேசியக்கட்சியின் கடந்த 100 நாள் ஆட்சியின் போது நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியதாக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இருந்த பல முகாம்கள் அகற்றப்பட்டன. மத்திய வங்கியில் முறிக்கொள்வனவு மூலம் 5000 கோடி ரூபா பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது. இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதமர், தாம் முன்னர் விடுதலைப்புலிகளுடன் செய்துக்கொண்ட உடன்படிக்கையை போன்று மீண்டும் ஒரு யுகத்தையே விரும்கிறாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை போரை வெற்றிக்கொண்டு இலங்கையில் இருந்து பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டது. எனினும் போரினால் இறந்த, பாதிக்கப்பட்ட பயங்கரவாதிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இது நிறைவேற்றப்பட்டிருந்தால் பயங்கரவாதிகளுக்கு நட்டஈடு வழங்கிய முதல்நாடு இலங்கையாகவே இருந்திருக்கும் என்று மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.