பதவிக்காகவும் பட்டத்திற்காகவும் முஸ்லிம்கள் மதம் மாறினார்கள் என்ற வரலாறே இந்த நாட்டில் கிடையாது. எனவே அமைச்சர் ராஜித தலைவர் ஹக்கீம் குறித்து தெரிவித்த கருத்தை மாற்றிக்கொண்டு அவர் பகிரங்கமாக முஸ்லிம் சமுதாயத்திடம் மன்னிப்பு கோர வேண்டும் என கல்முனை மாநகர சபையின் பிரதிமேயரும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான ஏ.எல். அப்துல் மஜீத் கூறினார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கல்முனை மாநகரமேயர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் மாநகரசபை சபை சபா மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.
ஜனாதிபதி பதவி கிடைக்குமென்றிருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது மதத்தையும் மாற்றிக்கொள்வார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் பிரதிமேயர் அப்துல் மஜீத் கவலையும் கண்டனமும் தெரிவித்து சபையில் உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து உறுப்பினர்கள் பலரும் இந்த விடயம் தொடர்பாக கூட்டத்தில் கவலையும் கண்டனமும் தெரிவித்து உரையாற்றியதுடன் இறுதியாக மேயர் நிஸாம் காரியப்பரும் உறுப்பினர்களின் கருத்துக்களை ஏற்றவராக உரையாற்றினார்.பிரதிமேயர் மேலும் உரையாற்றுகையில்,
அமைச்சர் ராஜித சேனாரத்ன தகவல் திணைக்களத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றது.
குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் கடுமையான விமர்சனங்கள் அமைச்சர் ராஜிதவின் கூற்று குறித்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. மிகவும் விமர்சனத்துக்குரியதாக அது மாறியிருக்கின்றது.
கருத்தும் கண்டனமும்
ஜனாதிபதிப் பதவி கிடைக்குமென்றிருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது மதத்தையும் மாற்றிக்கொள்வாரென அமைச்சர் ராஜித தெரிவித்த கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்க விடயமாகும்.
இலங்கை ஜனநாயகக் குடியரசின் அரசியலமைப்பில் 20 ஆவது திருத்தம் ஒன்றை கொண்டுவர வேண்டுமென்பதற்காக முன்மொழியப்பட்ட பிரேரணைகள் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அவருடைய தலைமையில் சிறுபான்மைக் கட்சிகளும் மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டன.
இரு பிரதான கட்சிகளும் அவர்களுடைய அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கான ஒரு முன்மொழிவாகவே 20 ஆவது திருத்தமிருக்கின்றது என சிறுபான்மைக் கட்சிகள் சுட்டிக்காட்டின.
சிறீமாவோ
1972 ஆம் ஆண்டு சிறீமாவோ ஆர்.டி.பண்டாரநாயக்க முதலாவது குடியரசு சாசனத்தை கொண்டுவந்தபோது அப்போதிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் அதனை எதிர்த்தனர். அத்துடன் அந்த நகலை தீயிட்டும் கொளுத்தினர்.
சிறுபான்மைச் சமூகத்திற்கு இருக்கும் ஒரேயொரு காப்புடமையான செனட் சபையை ஒழிக்கும் 29ஆவது சரத்தின் “ஏ” பிரிவு ஏன் நீக்கப்பட்டதெனவும் அது போன்று சிறுபான்மை சமூகத்தின் உரிமையை இல்லாமல் செய்யும் சரத்துகளிருக்கின்றன என்பதற்காக தமிழ்த்தலைவர்கள் போராடினார்கள். அண்ணன் அமிர்தலிங்கம் சிறையிலடைக்கப்பட்டார். இத்தகைய கடந்த கால அரசியல் வரலாறுகளுண்டு.
ஜே.ஆர்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டு வந்த அரசியல் யாப்பு கூட சிறுபான்மை சமூகங்களைப் பல விடயங்களில் பாதிக்கின்றது என்ற குரல்களும் அவ்வப்போது எழுந்து வந்துள்ளன. எனவே தான் இந்த 20 ஆவது திருத்தமென்பது 35 வருடங்களுக்குப் பிறகு கொண்டு வரப்படும் அரசியல் சீர்திருத்தமென்பதால் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் உரிமைகளை நிலைநாட்டும் உத்தரவாதப்படுத்தும் நிலைமையை உருவாக்க வேண்டுமென்பதில் எம் தலைவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
பெரும் தலையிடி
சிறிய கட்சிகள், சிறுபான்மைக் கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்காகச் செயற்பட்டமை சிங்கள இனவாத, வகுப்பு வாத சக்திகளுக்கு பெரும் தலையிடியாகவே இருந்தது. குறிப்பாக எமது தலைவர் அமைச்சர் ஹக்கீம் ஒன்றிணைந்து எடுத்த 20ஆவது திருத்தம் தொடர்பான நடவடிக்கைகள் அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால் தான் மிக மோசமான கருத்தை அமைச்சர் ராஜித முன்வைத்துள்ளார்.
சுயநலவாதி
ரவூப் ஹக்கீம் ஒரு சுயநலவாதி, சமூகத்திற்காக அவர் இரட்டை வாக்கு முறையைக் கொண்டு வரவில்லை, அவருடைய கட்சியை வளர்க்கவும் அவருடைய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவுமே கொண்டுவருகிறார் என அமைச்சர் ராஜித கூறியது மட்டுமன்றி ஜனாதிபதிப் பதவி கிடைக்குமாகவிருந்தால் அவர் தனது மதத்தையும் மாற்றிக் கொள்வாரென்ற மிக மோசமான கருத்தையும் வெளியிட்டார்.
15 வருடங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 15வருடங்களாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமை தாங்கிக் கொண்டிருக்கின்றார். பல தடவைகள் சமூகத்திற்காக அமைச்சர் பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு வந்துள்ளார். அமைச்சர் பதவிக்காக அங்குமிங்கும் அலைந்து ஆல வட்டம் போடும் ஒரு தலைவரல்ல முஸ்லிம் காங்கிரஸின் தலைவரென்பதை இத்தகையவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ராஜித
ஆனால் அமைச்சர் ராஜித வளர்த்த கட்சியையே விட்டு வெளியேறி அமைச்சர் பதவியைப் பெறுவதற்காக ஐக்கிய முன்னணி அரசில் இணைந்து கொண்ட வரலாற்றை மறுத்து விடமுடியாது. முஸ்லிம்கள் தமது உயிரை விடவும் தமது சமயத்தை மேலாக மதிப்பவர்கள். அதற்காக போராடி மடியக்
கூடியவர்கள்.
ருஷ்தி – தஸ்லீமா
முஸ்லிம் சமுதாயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் காட்டிக் கொடுக்கும் கருத்துக்களைத் தெரிவித்த சல்மான் ருஷ்தியையும் தஸ்லீமா நஸ் ரீனையும் சமுதாயத்திலிருந்து தூக்கியெறிந்தது எமது சமுதாயம். எனவே அமைச்சர் ராஜித இதைப்புரிந்து கொள்ளவேண்டும்.
ஒரு சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி பதவி பட்டம் பணத்திற்காகச் சமயத்தைத் துறக்கமாட்டான். ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டுமென்பதற்காக எவர் மதம் மாறினார்களென்பதை வரலாற்றைப் புரட்டிப் பார்த்துப் புரிந்து கொள்ளவேண்டும்.
முஸ்லிம்கள்
முஸ்லிம்கள் அப்படியல்ல. இலங்கை வரலாற்றில் அப்படி எதுவும் பதிவு செய்யப்படவில்லை. பதவிக்காக பட்டத்திற்காக பணத்திற்காக முஸ்லிம்கள் மதம் மாறினார்களென்ற வரலாறே கிடையாது. எனவே அமைச்சர் ராஜித சேனாரத்ன தமது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர் பகிரங்கமாக முஸ்லிம் சமுதாயத்திடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கூறினார்.