தர்கா நகர், அதிகாரிகொட பிரதேசத்தில் இன்றிரவு சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களிடையே கைகலப்பொன்று ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
தர்கா நகர் பிரதேசத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற கலவரத்தின் போது தீக்கிரையாக்கப்பட்டு பின்னர் புனரமைப்பு செய்யப்பட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலுக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, சிங்கள இளைஞரொருவர் முச்சக்கர வண்டியின் வானொலி பொட்டியில் சத்தமாக பாடல் ஒலிபரப்பியுள்ளனர்.
இதனை நிறுத்துமாறு முஸ்லிம் இளைஞர்கள் தெரிவித்தும் நிறுத்தாமையினால் முஸ்லிம் இளைஞர்களினால் குறித்த நபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். இந்த சம்பவம் நான்கு சிங்கள இளைஞர்களும் இரண்டு முஸ்லிம் இளைஞர்களும் இடையில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து விசேட அதிரடிப் படையினர் குறித்த பிரதேசத்திற்கு வருகை வந்து நிலைமைகளினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்கள் பொலிஸாரினால் தேடப்படுகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே புத்தளம் மதுரங்குளி பிரதேசத்திலும் 2 கிராமத்தவர்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.