மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார்
சவுதி அரேபியாவில் வேலைக்குச் செல்லும் இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களைப் பொறுத்தவரை அவர்களுல் அதிக சிரமத்துக்கும் மன உளைச்சலுக்கும், கேவலப்படுத்தலுக்கும் உட்பட்டு வேலை வாங்கப்படுவோர் கத்தாம்மா என்கிற வீட்டுப் பணிப் பெண்களும் (Housemaids) மற்றும் வீட்டுச் சாரதிகளும்தான் (House Drivers) என்பது சவுதியில் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்..
ரைவர் வேலைக்கு வருகின்ற சிலபேருக்கு அதிஷ்டவசமாக நல்ல வீடுகள் கிடைக்கும் போது சந்தோசமாக தொழில் செய்து தங்களது குடுப்பப் பிரச்சினைகளை நிபர்த்தி செய்து கொள்கின்றார்கள் ஆனால் பல பேர் நரக வீடுகளிலேயே அகப்பட்டுக் கொண்டு இன்னல் படுகின்றார்கள்.
சவுதி அரேபியாவுக்கு வீட்டுச் சாரதிகளாக நீங்கள் வந்தால் ஒரு சில விடயங்களைக் கருத்தில் கொண்டு வேலை செய்ய வேண்டும். இது புதிதாக வருபவர்களுக்கும், ஏற்கனவே வந்தவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என நினைக்கின்றேன்.
01. முதலில் நாம் கேவலம் கெட்டவர்களோ அல்லது இங்கு வேலைக்கு வந்த அடிமைகள் என்றோ, அல்லது நாய்க்குட்டியாய் வால் ஆட்டுபவர்கள் என்றோ எதிர்மறையான எண்ணங்களை விட்டொழியுங்கள். அவர்கள் நமக்கு சம்பளத்தை நன்கொடையாக வழங்கவில்லை நாம் வேலை செய்கின்றோம் அதற்கு கூலி வாங்குகின்றோம் என்ற எண்ணத்தோடு வேலை செய்யுங்கள்.
02. உங்கள் எஜமானர்களும் வீட்டு மேடம்களும் உங்களை அவதானித்து சரியாக கணக்கெடுத்துக் கொண்ட பின்னர் உங்களை அதற்கேற்றாப் போல் ஆட்டிப்படைப்பார்கள் அதற்கிடையில் நீங்கள் யார் என்பதை அவர்களுக்கு காட்டிவிட வேண்டும். உங்கள் கூச்ச சுபாவம், பயந்த தன்மை, அதிக பணிவு இவை எல்லாம் அவர்கள் உங்கள் தலையில் ஏறி உட்கார வழிவகுக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
03. நீங்கள் புதிதாக வந்தவராக இருந்தால் உங்களைப் பரிசோதனை செய்வதற்காக சிலர் பெறுமதி வாய்ந்த கடிகாரம், பணம், தொலைபேசி போன்றவற்றை நீங்கள் ஓட்டிச் செல்லும் வாகணத்தில் போட்டு விடுவார்கள் அப்படி ஏதேனும் பொருளைக் கண்டால் அதனை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் அது உங்களுக்கு நல்ல பெயரையும், நன்மதிப்பையும் அவர்களிடத்தில் பெற்றுத் தரும்.
04. நீங்கள் புதிதாக வேலைக்கு வந்தவராக இருந்தால் உங்களுக்குத் தரப்படும் Room இல் ஏசி, தண்ணீர் வசதி, சமைப்பதற்கு கேஸ் போன்றன இருக்கின்றனவா என்பதைக் அவதானித்துக் கொள்ளுங்கள் இல்லாத பட்சத்தில் அவற்றை உங்கள் Boss இடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள், அந்த வசதிகளை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவது அவரது கடமை, கேட்பது உங்களது உரிமை.
05. உங்களுக்குத் தரப்படும் Room இல் இருக்கும் பழைய மெத்தைகள், போர்வைகளை உங்களைப் பயண்படுத்தச் சொன்னால் அவற்றைப் பயண்படுத்தாமல் புதிதான் வாங்கிக் கேளுங்கள். காரணம் அந்த Room இல் இருக்கும் மெத்தைகளையும், போர்வைகளையும் வேறு ஒரு ரைவர் பயண்படுத்தியிருப்பார் அதனை நீங்கள் பயண்படுத்தினால் உங்களுக்கு நோய்த் தொற்றுக்களும் ஏற்படலாம்.
06. நீங்கள் உங்கள் எஜமானிகளோடு எங்காவது வெளியில் போகும் போது வாகண நெரிசல் மிக்க வீதிகளில் உங்களுக்கு முன் கூட்டி அறிவிக்காமல் திடிரென வண்டியை இடது பக்கம் திருப்பு அல்லது வலது பக்கம் திருப்பு என்று சொல்வார்கள் இதனால் நீங்கள் விபத்துக்களையும் சந்திக்க நேரிடலாம். ஆகவே எங்காவது செல்வதற்கு முன் அவர்களிடம் திருப்பும் இடங்களை முன் கூட்டிச் உங்களிடம் சொல்லச் சொல்லுங்கள்.
07. உங்களை சாப்பாடு வாங்கி வரச் சொல்வி விட்டு நீங்கள் வரும் வரை “ சாப்பாடு வாங்கியாச்சா..??? வருகிறாயா..??? வருவதற்கு எவ்வளவு நேரமாகும்..?? என சில வீடுகளில் போனுக்கு மேல் போன் பண்ணிக்கிட்டே இருப்பார்கள். நீங்கள சாப்பாடு வாங்கி விட்டு உங்கள் வீட்டை வந்தடைய சுமார் 5 நிமிடங்கள் எடுக்கும் என்றால் அவர்களிடம் 10 நிமிடத்தால் வந்துவிடுவேன் என்று 5 நிமிடத்தை அல்லது அதற்கும் மேல் அதிகப்படுத்திச் சொல்லுங்கள். காரணம் நீங்கள் உங்கள் மேடத்திடம் 5 நிமிடத்தால் வந்துவிடுவேன் என்று சொல்லி விட்டு 10 நிமிடத்தால் சென்றால் உங்களை அவர்கள் திட்டுவார்கள். அதனால் நேரத்தை அதிகப்படுத்திச் சொன்னால் அதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். நீங்கள் வரும் வழி வாகண நெரிசலாக இருந்தால், அல்லது ஏதேனும் விபத்து நடந்து வீதி தடைப்பட்டால் அதனால் ஏற்படும் தாமதத்தை நீங்கள் சொல்லும் 5 நிடத்தில் சமாளித்து விடலாம்.
08. சில வீடுகளில் சாரதிகளுக்கு உணவுகள் வழங்கும் போது பொதுவாக புத்தம் புதிய உணவுகளை வழங்க மாட்டார்கள், சில பேருக்கு வழங்க மனசு வராது அப்படியாப்பட்டவர்கள் அவர்களால் இனிமேல் உண்ணவே முடியாது என கருதும் உணவை உங்களிடம் கொண்டு வந்து நீட்டுவார்கள் அவ்வாறான உணவுகளை அவர்களிடமிருந்து பெற்று உண்ண வேண்டாம் திருப்பி அனுப்பி விடுங்கள், நீங்கள் ஒன்றும் நாய்கள் கிடையாது. சில வீடுகளில் வேலை செய்யும் ரைவர்மார்களுக்கு உணவு விடயத்தில் குறை வைக்க மாட்டார்கள்.
09. உங்களை பெரும்பாலும் வேலை வாங்குபவர்களாக இருப்பவர்கள் அந்த வீடுகளில் இருக்கும் பெரியவர்களும், பெண்களுமாகத்தான் இருப்பார்கள். சில நேரம் அந்த வீடுகளில் இருக்கும் சிறுவர்கள் உங்களை கடைகளுக்கு செல்ல அழைப்பார்கள் அந்த நேரம் அவர்களை கடைகளுக்குச் கூட்டிச் செல்ல வேண்டாம், உங்கள் மேடம் சொன்னால் மாத்திரம் அழைத்துச் செல்லுங்கள். காரணம் அந்தச் சிறுவர்கள் வீட்டிலிருந்து காசை எடுத்து வந்து வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் கடைக்குச் செல்வார்கள் அந்த நேரம் நீங்களும் அவர்களை அழைத்துச் சென்று ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் அது உங்களைப் பாதிக்கும்.
10. நீங்கள் சாப்பிடும் போது உங்களை வேலைக்கு அழைத்தால் சாப்பாட்டை இடையில் விட்டு விட்டு கை கழுவிக் கொண்டு வேலைக்குச் செல்ல வேண்டாம். முழுமையாகச் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். சாப்பிடு்ம் போது உங்களுக்கு போன் பண்ணினால் சாப்பிடுகின்றேன் சாப்பிட்டு விட்டு வருகின்றேன் என்று பயப்புடாமல் சொல்லுங்கள்.
11. எப்போதும் பயந்த சுபாவம் கொண்டவர்களாகவோ, அதிக பணிவு காட்டுபவர்களாகவோ தயவு செய்து இருக்க வேண்டாம். உங்களுக்குத் தெரிந்த பாசையில் தெளிவாக, தைரியமாக அவர்களிடம் பேசுங்கள், தேவையானவைகளை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.
12. சில வீடுகளில் அவர்கள் ஏதேனும் வேலைகளை உங்களைச் செய்யச் சொல்லாமல் நீங்களாகவே செய்ய வேண்டாம் அப்படிச் செய்யும் போது அதனை அவர்கள் பழக்கமாக எடுத்து தொடர்ச்சியாக அந்த வேலையை உங்களைச் செய்யச் சொல்வார்கள். ஆனால் சில வீடுகளில் இருப்பவர்கள் உங்களோடு மிக அருமையாக நடந்து கொள்வார்கள் அவ்வாறான வீடுகளில் உங்களது வேலைக்கு அப்பால் உள்ள வேலைகளையும் செய்து கொடுத்து அவர்களுக்கு உதவலாம்.
13. உங்களுக்கான ரைவிங் லைசன்ஸ், இகாமா போன்றவற்றை கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள், சில வீடுகளில் அவைகள் கொடுக்கப்படாது வேலை வாங்கப்படுவதுன்டு.
14. எந்த இடத்திற்கு உங்களை அழைத்தச் சென்றாலும் அந்த இடங்களையும், வீதிகளையும் நன்றாக ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் அது உங்கள் வேலைகளை இலகுபடுத்தும்.
15. சவுதியைப் பொறுத்தவரை வீதிகளில் வேகத்தை கட்டுப்படுத்த கெமறாக்கள் வைத்திருப்பார்கள் கெமறாக்கள் எந்தெந்த வீதிகளில் பொருத்தப்பட்டிருக்கின்றது என்பதைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். ஸ்பீட் லிமிட்டை தாண்டி வேகமாகச் செல்ல முற்பட வேண்டாம் தவறும் பட்சத்தில் தண்டப்பணத்தை உங்கள் சம்பளங்களிலேயே கழித்து விடுவார்கள்.
16. உங்களை ஏதேனும் பொருட்களை வாங்கி வரச் சொன்னால் அவற்றின் பெயர்களை நன்றாக உள்வாங்கி கொள்ளுங்கள், ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் இதுவும் உங்கள் வேலைகளை இலகுபடுத்தும்.
17. உங்களுக்கு போன் செய்து சாப்பாடு வாங்கி வா என்று சொன்னால் அவர்களிடம் முழு விபரத்தையும் தெளிவாகக் கேளுங்கள், என்ன சாப்பாடு..??? எந்த ஹோட்டலில் என்ற விபரங்களை கேளுங்கள். நம்மில் சிலர் சாப்பாடு வாங்கி வா என்று சொன்னவுடன் ஓகே மேடம் என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணியவுடன் மேடம் என்ன சாப்பாடு வாங்கி வரச் சொன்ன..??? எங்க போய் வாங்கி வரச் சொன்ன என்று முழுசுவார்கள்.
18. சிலருக்கு இருப்பிடங்கள் Room அவர்களின் வீட்டின் உற்பகுதியில் கொடுத்திருப்பார்கள் அப்படியான றும்கள் கிடைக்கப் பெற்றவர்கள் அந்த றும்களுக்குல் உங்கள் நண்பர்களை அழைத்துச் செல்வதை தவிர்த்து விடுங்கள் அல்லது அவர்களின் அனுமதி பெற்று அழைத்துச் செல்லுங்கள்.
ஆகவே நண்பர்களே…!!! நீங்கள் சவுதிக்கு அல்லது ஏதேனும் ஒரு வளைகுடா நாட்டுக்கு வீட்டுச் சாரதிகளாக வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் அதுவே உங்களுக்கான எனது இறுதி அறிவுரையாகும் அப்படியே ஏதோ கஷ்டத்தில் வந்துவிட்டீர்கள் என்றால் நான் மேற் சொன்ன சில விடயங்களை கவனத்தில் கொண்டு வேலை செய்வது உங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும் என நினைக்கின்றேன்.