எத்தகைய தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் நற்பிட்டிமுனை மைதான அபிவிருத்தி கைவிடப்படாது; முதல்வர் உறுதி!

அஸ்லம் எஸ்.மௌலானா
நற்பிட்டிமுனை அஷ்ரப் விளையாட்டு மைதான அபிவிருத்திப் பணிகளை சீர்குலைக்க எத்தனிக்கும் தீய சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Mayor Nizam (4)_Fotor
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எத்தகைய தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் இம்மைதான அபிவிருத்திப் பணிகள் ஒருபோதும் இடைநடுவில் கைவிடப்பட மாட்டாது என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றபோது மாநகர சபையின் ஐ.தே.க. உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார், நற்பிட்டிமுனை மைதான அபிவிருத்திக்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகள் தொடர்பில் பிரஸ்தாபித்தபோது அதற்கு பதிலளிக்கையிலேயே முதல்வர் இவற்றைக் குறிப்பிட்டார்.
அங்கு உறுப்பினர் நபார் உரையாற்றுகையில் கூறியதாவது;
“நற்பிட்டிமுனை விளையாட்டு மைதான அபிவிருத்திக்காக முதல்வர் கொண்டு வந்த திட்டமானது எமது மாநகர சபையின் நற்பிட்டிமுனை உறுப்பினர்கள் மூவரினதும் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட அணைத்த தரப்பினரினதும் இணக்கப்பாட்டுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் சில வழுக்கள் இருக்கலாம். அதற்காக மைதான அபிவிருத்திப் பணிகளை முற்றாக நிறுத்தி விட முடியாது. தவறுகள் திருத்தப்பட வேண்டும். ஆனால் புதிததாக அரசியல் முகவரிகள் தேடுகின்ற சிலர் இம்மைதான அபிவிருத்தித் திட்டத்தை முடக்குவதற்கு சதி செய்கின்றனர்.
அதன் வெளிப்பாடே அம்மைதானத்தில் குப்பைகளை எரித்து மக்கள் மத்தியில் அத்திட்டத்தை பிழையாக சித்தரிப்பதற்கும் நற்பிட்டிமுனை உறுப்பினர்கள் மூவருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கும் அவர்கள் முயற்சிக்கின்றனர். அந்த நபர்கள் தற்போது விளையாட்டு மைதானத்தில் குப்பைகளை எரித்து மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியிருப்பதுடன் மைதான அபிவிருத்திப் பணிகளை நிறுத்தும் நோக்கில் நுழைவாயிலுக்கு பூட்டு போட்டுள்ளனர்.
ஆகையினால் அவர்கள் மீது சட்ட நடவைக்கை எடுப்பதற்கும் மைதான அபிவிருத்தித் திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக முன்னெடுப்பதற்கும் முதல்வர் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எமது பிரதேச மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.” என்று குறிப்பிட்டார்.
 Nafar_Fotor