வபா பாறுக்
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றின் உயிரெழுத்துக்களுக்கு உரிமையாளர் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களே என்பதில் எதிரிகளுக்குகூட எள்ளவும் சந்தேகமில்லை.
முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் அடையாளத்தைப் பெற்றுக் கொள்வதிலும் தனித்துவ அரசியல் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதிலும் அவருடைய பங்களிப்பு நிகரற்றது. விகிதாசார தேர்தல் முறைமையில் சிறுபாண்மையினங்களை நிரந்தர அடிமைகளாக்கும் அங்கமாயிருந்த 12.5% வெட்டுப்புள்ளியை 5% ஆக குறைப்பதற்கு தனது அரசியல் பேரத்தை புத்திசாதுர்யமாக பாவித்தமையே நமது அரசியல் அதிகாரத்தின் அத்திவாரமாகும்.
இவ்விடையத்தில் ஸ்த்தாபகத் தவிசாளர் சேகு இஸ்ஸதீனின் நுட்பமான அறிவியல் ப்ங்களிப்பு அடிப்படையானது. வெட்டுப்புள்ளி விடயம் எத்தனை முக்கியத்துவமிக்கதோ அதே போல் அல்லது அதைவிட முக்கியத்துவம் உடையதுதான் 20 ஆவது திருத்தச்சட்டமூலமும் என்பதை சரிப்பட புரிந்து கரிசனையுடன் காத்திரமாக செயல் பட்டதன் மூலம் பாரிய அரசியல் அழிவிலிந்து சிறுபாண்மைச் சமூகங்கள் பாதுகாக்கப்ப்ட்டன.
இதனைச் சாதிப்பதற்கு பல கட்சிகள்/அமைப்புகள் பங்களிப்பு செய்திருந்தாலும் மு.கா. தலைவரின் முன்னெடுப்பு முக்கியத்துவமிக்கது.அவரது முன்னெடுப்பும் பங்களிப்பும் இல்லாதிருந்தால் பாராளுமன்றம் கலையும் நிலை வரை சென்றிருக்காது.
ஒரு வகையில் இது இன்னும் ஒரு மீட்சியாகும். தலைவர் ஹகீம் அறிந்தும் அறியாமலும் செய்த அரசியல் தவறுகளுக்கான ஒட்டு மொத்த பிராயச்சித்தமாக இந்த முயற்சியை ஏற்றுக் கொள்வதே சமூகம் செய்யக்கூடிய கைமாறாகும்.தலைவர் ஹகீமின் பொறுப்பு இத்துடன்முடிந்து விடவில்லை பாராளுமன்றத்தை கலைக்க வைக்கும் அளவுக்கு பிரயத்தனம் எடுத்து உறுதிப்படுத்தியுள்ள அதிகாரத்தை. சுய நலங்களுக்காக அடமானம் வைக்கும் கும்பலிடம் பலி கொடுக்காமல் பாதுகாப்பது முன்னுள்ள முக்கிய பொறுப்புக்களில் ஒன்று.
அடுத்து தாம் ஆதரிக்கும் நாட்டின் எதிர்காலத் தலைமை ஒரு ஸ்திரத்தன்மை மிக்கதாகவும் இருக்க வேண்டும். எதற்கும் இணங்காத கடும் போக்குடைய தலைமையிலிருக்கும் ஆபத்து போன்றே எதிலும் தீர்க்கமில்லாத வழு வழுத்த தலைமையும் ஆபத்து மிக்கது என்பதை புரிந்த நிலையிலேயே தெரிவை மேற்க்கொள்ள வேண்டும்.எதிர் வரும் நாட்களும் ஹகீமுக்கு சவால் நிறைந்ததாகவே உள்ளன.ஆயினும் அவரால் சமாளிக்க முடியாதவையுமல்ல.