பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட எனக்கு ஒன்றும் பைத்தியம் பிடிக்கவில்லை. நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்தோரே தமது ஊழல்களை மூடி மறைப்பதற்காக அதிகார பீடமேற முனைகின்றனர். எனவே மீளவும் அரசியலுக்கு வர வேண்டிய பேராசை எனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சீரழிக்கும் விமல் வீரவன்ஸவை ஒரு சதத்திற்கும் கூட கணக்கில் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்த பின்பு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பிரதமர் வேட்பாளராக மீளவும் அரசியலுக்கு வருவதற்கு எனக்கு ஒன்றும் பைத்தியம் பிடிக்கவில்லை. நீண்ட கால அரசியல் வாழ்க்கையின் பின்பு நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன். எனவே ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் மீளவும் அரசியலில் பிரவேசிப்பதற்கு நான் பேராசை பிடித்தவள் அல்ல.
அதிகார மோகம் பிடித்தவர்கள் தான் தமது ஊழல், மோசடிகளை மூடிமறைப்பதற்காக மீளவும் அதிகார பீடமேறுவதற்கு முயற்சிக்கின்றனர். ஆனால் நான் எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையிடவில்லை. ஆகையால் அதிகார மோகம் எனக்கு கிடையாது. எனவே நான் பிரதமர் வேட்பாளராக களமிறங்கப் போவதில்லை.
அதிகார மோகம் பிடித்தவர்களே மீளவும் அரசியலுக்கு வர முனைகின்றனர்.
இதேவேளை இதன்போது விமல் வீரவன்ஸ தொடர்பில் ஊடகவியலாளர்களினால் கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போது அவர் குறிப்பிடுகையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியை சீர் குலைக்கும் வகையில் செயற்படும் விமல் வீரவன்ஸ தொடர்பில் எதுவும் என்னால் கூறமுடியாது
விமல் வீரவன்ஸவின் கருத்துக்களை நான் ஒரு சதத்திற்குக் கூட கணக்கில் எடுக்கப் போவதில்லை என்றார்.